Tamilnadu

"சிறுவனின் தொண்டையில் சிக்கிய நாணயம்" : மறுத்த தனியார் மருத்துவமனை - அகற்றி காட்டிய அரசு மருத்துவமனை!

திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் மிதுன் நேற்று முன்தினம் ஒரு ரூபாய் நாணயத்தைத் தவறுதலாக விழுங்கியுள்ளார்.

இந்த நாணயம் சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவனை தனியார் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து சிறுவனை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிறுவனுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது உணவுக்குழாய் தொண்டைப்பகுதியில் நாணயம் சிக்கிக் கொண்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பின்னர் தொண்டை துறையின் தலைவர் மருத்துவர் இளம் செழியன் மேற்பார்வையில் சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பிறகு “LARYNGOSCOPY“ முறையில் அறுவை சிகிச்சையின்றி, சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். பின்னர் சிறுவனின் உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்பியதும், வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

அறுவை சிகிச்சை எதுவும் செய்யாமல் நாணயத்தை அகற்றிய அரசு மருத்துவ குழுவினருக்குச் சிறுவனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

Also Read: பணிச்சுமை குறைத்து வார விடுப்பு வழங்கிய தமிழக அரசு: காவலர்களின் காவலனான முதல்வர் -தினகரன் நாளேடு புகழாரம்