Tamilnadu

“எதிர்க்கட்சியினரே பாராட்டும் வகையில் செயல்படும் தி.மு.க அரசு” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க அரசை அ.தி.மு.கவினரும் பாராட்டுகின்றனர் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பேசினார்.

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

முத்தமிழறிஞர் கலைஞர் நினைவாக கீரனூரில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிக்கும் விழா, புதுக்கோட்டையில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், லேணா விலக்கில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் இன்று நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் ரவிச்சந்திரன், ம.நீ.ம மாவட்டத் தலைவராக இருந்த மூர்த்தி உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 5,000 பேர் அ.தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “சட்டப்பேரவையில் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக 110 விதியின் கீழ் முத்து முத்தான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் யாருமே தி.மு.க அரசை எதிர்த்துப் பேசுவதில்லை.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க கொறடா எஸ்.பி.வேலுமணி போன்றோர்கூட தி.மு.க அரசை பாராட்டிப் பேசும் அளவுக்கு தி.மு.க அரசின் செயல்பாடு உள்ளது.

தேர்தல் அறிக்கையில் கூறியதைப் போல, பெட்ரோல் மற்றும் ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 3 மாத தி.மு.க அரசின் செயல்பாட்டால் இந்திய அளவில் முதல்வருக்கே முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். இப்படியே அரசின் செயல்பாடு தொடர்ந்தால் அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் வாக்கு கேட்கவே செல்ல வேண்டியதில்லை. மீண்டும் தி.மு.க ஆட்சிதான் அமையும்.

அ.தி.மு.க ஆட்சியில் 6 மாதங்களில் 50 லட்சம் பேருக்குத்தான் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த 110 நாட்களுக்குள்ளாகவே கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளைப் பெற்று, 3.70 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” எனப் பேசினார்.

Also Read: ‘செப்., 13ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்.. நிச்சயம் விலக்கு பெறுவோம்” : அமைச்சர் மா.சு பேட்டி!