Tamilnadu

“தாயின் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்த மகன்” - மதுரையில் ஒரு நெகிழ்ச்சி நிகழ்வு!

மதுரையில் தாயின் திருமணத்திற்கு மகனே தாலி எடுத்துக் கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஆதிஸ், ஓவியக் கலைஞர். திருநெல்வேலியைச் சேர்ந்த சுபாஷினி கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றுபவர்.

கணவரைப் பிரிந்து தனது மகன் தர்ஷனுடன் வாழ்ந்து வந்த சுபாஷினி, இன்று ஆதிஸை கரம்பிடித்துள்ளார். இவர்களது காதல் திருமணம் இன்று மதுரையில் எளிமையான முறையில் நடைபெற்றது.

குடும்பத்தினரின் நம்பிக்கைக்காக சடங்குகளுடன் திருமணம் செய்த மணமக்கள், திருமணம் முடிந்த கையோடு தந்தை பெரியார் சிலைக்கு முன் அவரது படத்துக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

இந்தத் திருமணத்தின்போது, மணப்பெண் சுபாஷினியின் மகன் தர்ஷன் தாலி எடுத்துக் கொடுக்க, ஆதிஸ் அதை சுபாஷினியின் கழுத்தியில் கட்டினார். இந்த நிகழ்வு அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் திருமணத்தில் மேலும் சில உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. ஆதிஸின் நண்பரான புஹாரி ராஜா, மணப்பெண்ணுக்குத் தாய்மாமனாக இருந்து மாலையிட்டார். ஆதிஸின் நண்பரான கார்த்திக், மைத்துனராக மெட்டி அணிந்தார்.

நண்பர்களே உறவுகளாக சடங்குகள் செய்ய, மகன் தாலி எடுத்துக் கொடுக்க நடைபெற்ற இந்தத் திருமணத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: கணவனை இழந்த மருமகளுக்கு மூன்றே மாதங்களில் மறுமணம் செய்து வைத்த மாமியார் : சமூக வலைதளங்களில் பாராட்டு!