Tamilnadu

மண்பாண்டத் தொழில் செய்வோருக்கு மழைக்கால நிவாரணம் அறிவித்த மக்கள் முதலமைச்சர் : மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரின் போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரைத்து பேசியிருந்தார்.

அப்போது, மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் விநாயகர் சிலை செய்யும் தொழிலாளிகளுக்கு நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரக்கூடிய சுமார் 12 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மழைக் காலங்களில் தொழில் செய்ய இயலாத நிலையிலே, அவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுள், சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளைச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, பொது இடங்களில் விழாக்களைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது தொழிலை மேற்கொள்ள இயலாத நிலையில், அவர்களது வாழ்வாதாரம்கூட பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதனையெல்லாம் இந்த அரசு கருத்திலேகொண்டு, இந்த 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்காலப் பாதிப்பு நிவாரணத் தொகை போக, கூடுதலாக மேலும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதை பேரவைத் தலைவர் மூலமாக இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.” என அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு மண்பாண்ட மற்றும் விநாயகர் சிலை செய்யும் தொழிலாளிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read: ”பண்டிகை கால கட்டுப்பாடுகளை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்”: பாஜக MLAக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!