Tamilnadu

“பா.ஜ.க - இந்து முன்னணி கும்பலுக்கு இருப்பது பக்தி அல்ல, கலவர புத்தி” : அண்ணாமலையை சாடிய கே.பாலகிருஷ்ணன்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் செப்டம்பர்2 ஆம் தேதி சென்னையில் மத்தியக்குழுஉறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபர்கள் கரைக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு மட்டுமின்றி அனைத்து மத வழிபாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அந்தந்த மதங்களை சேர்ந்த மக்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பெருமளவில் மக்கள் கூடும் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என ஒன்றிய அரசும் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது; தடையை மீறுவோம் என பா.ஜ.க மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை மிரட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது.

இதேபோல இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளும் தடையை ஏற்க முடியாது என்றும், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வோம் என்றும் மிரட்டியுள்ளது தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் நோக்கம் கொண்டதே ஆகும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைதியாக நடைபெற்று வந்த விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை கலவரமாக மாற்றியவர்கள் இவர்களே. நோய்த்தொற்று காலத்திலும் கூட தங்கள் கலவரத் திட்டங்களை கைவிட பா.ஜ.க, இந்து முன்னணி பரிவாரம் தயாராக இல்லை. இவர்களது நோக்கம் கடவுள் பக்தி அல்ல. கலவர புத்தியே ஆகும். எனவே தமிழக அரசு அறிவித்துள்ளதை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், பாஜக பரிவாரத்தின் கலவர அறிவிப்பை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு” : மோடி அரசை வெளுத்து வாங்கும் ‘தினகரன்’ நாளேடு !