Tamilnadu

“ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்” : நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

அந்த மனுவில், நாட்டு மாடுகளுக்கு பெரிய திமில் இருக்கும் என்பதால் அதனை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளுக்கு திமில் இருப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில் 2017ல் பிறப்பிக்கப்பட்ட சட்டத் திருத்தத்தில், நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையிலும், தமிழக கலாச்சார பண்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் இச்சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.

வெளிநாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள தடையில்லை என்ற அரசுத்தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் என கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும், பொய் சான்றிதழ் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கமளிக்க அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: “21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம்.. குடும்பத்தினருக்கு அரசு வேலை” : பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!