Tamilnadu

குழந்தையை தாக்கிய தாய்: மன அழுத்தத்தின் காரணமாக நடந்த சம்பவமா? மருத்துவ சான்றிதழ் சொல்வது என்ன?

விழுப்புரம் மாவட்டம், மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான வடிவழகனுக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துளசி என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் ஆந்திராவில் உள்ள அவரது தனது வீட்டிற்குச் சென்றுள்ளார் துளசி. இதையடுத்து வீட்டிலிருந்த மனைவியின் செல்போனை வடிவழகன் எடுத்துப் பார்த்துள்ளார். அதில் தனது இரண்டாவது குழந்தையைத் துளசி கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் வீடியோ இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இதே போன்று நான்கு வீடியோவும் இருந்துள்ளது.

குழந்தையைத் தாக்கும் வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குழந்தைக்கு ரத்தம் வரும் வரை அடித்துவிட்டு அவரே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.

Also Read: “குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிப்பில் இருக்கிறான்” : கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தையின் தந்தை பேட்டி!

பெற்ற தாயே குழந்தையைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது குறித்து கணவர் வடிவழகன், மனைவி துளசி மீது செஞ்சி சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவரின் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிஸார், ஆந்திராவில் உள்ள சித்தூருக்கே சென்று அந்த பெண்ணைக் கைது செய்து செஞ்சி அழைத்து வந்தனர்.

இதனிடையே ஈன்றெண்டுத்த குழந்தையை கொடூரமாக தாயே தாக்கும் வீடியோவை கண்டு தாய்மார்கள் உட்பட பலரும் அந்த பெண்ணை சரமாரியாக வசைபாடினர். மேலும் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்த காரணத்தால் குடும்ப சூழ்நிலை குறித்த எந்த அடிப்படை புரிதலும் இல்லாத மனச் சுமையின் காரணமாகவே இது போன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடும் என ஒருசாரர் கூறி வருகின்றனர்.

இது போன்ற சிறு வயதிலேயே திருமணம் செய்வதை தடுத்து நிறுத்துவது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குழந்தையை தாக்கிய அப்பெண் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதை கணவர் வடிவழகன் அறிந்ததன் காரணமாகவே இருவருக்கும் இடையே தகராறு முற்றியிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

மேலும் கணவன் மீதுள்ள வெறுப்பினால்தான் குழந்தையை தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட துளசி போலிஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது குழந்தையை தாக்கியதற்கு வருந்துகிறீர்களா என்று கேட்டதற்கு ஆம் என துளசி கூறியுள்ளார். தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்ததை அடுத்து நல்ல மனநலத்திலேயே துளசி இருக்கிறார் எனவும் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read: பெற்றக் குழந்தையை துன்புறுத்தியது ஏன்? வாக்குமூலம் அளித்த துளசி.. அதிர்ச்சியில் உறைந்த போலிஸ்!