Tamilnadu

“தி.மு.க அரசின் சிறப்பான செயல்பாட்டால் தமிழ்நாட்டுக்கு கிடைத்த நன்மை..“: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக ஒன்றிய அரசிடமிருந்து கூடுதல் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தமிழக முதலமைச்சரின் ஆலோசனைப்படி பல்வேறு தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி வழங்க சிறப்பு முகாம்கள் ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், சென்னையில் உள்ள நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான தடுப்பூசி முகாம் உயர்கல்வித்துறை அமைச்சரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக ஒன்றிய அரசிடமிருந்து ஜூலை மாதம் கூடுதலாக 17 லட்சம் தடுப்பூசிகளும், ஆகஸ்ட் மாதம் கூடுதலாக 22 லட்சம் தடுப்பூசிகளும் தமிழகத்துக்கு பெறப்பட்டுள்ளது.

இந்த நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி நூற்றாண்டை கடந்த மிகவும் பழமையான ஒரு கல்லூரி. இந்தக் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் என்னிடத்தில் மேலும் கூடுதலாக பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்ததன் அடிப்படையில் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் இது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அமைச்சர் உடனடியாக இந்த ஆண்டு 3 பாடப்பிரிவுகள் ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 10 பாடப்பிரிவுகள் புதியதாக கல்லூரியின் சார்பில் கேட்கப்பட்ட நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அந்த பாடப் பிரிவுகளுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திய பிறகு அடுத்த கல்வி ஆண்டில் இந்த பாடப்பிரிவுகளை அறிவிப்பது குறித்து முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார். ஒரு புது பாடப்பிரிவை தொடங்குவதற்கு முன்னர் அதற்கு தேவையான வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

எனவே, இந்தக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டவுடன் அடுத்த கல்வி ஆண்டில் நிச்சயம் கல்லூரி முதல்வரின் கோரிக்கையை ஏற்று மீதமுள்ள பாடப்பிரிவுகளையும் ஒதுக்கித் தரும்படி உயர்கல்வித்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

Also Read: SC,ST விவசாயிகளுக்கு 100% மானியத்தில்‌ கிணறு, மோட்டாருடன்‌ நுண்ணீர் பாசன வசதி: வேளாண் அமைச்சர் அறிவிப்பு!