Tamilnadu

11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு நிரபராதி என தீர்ப்பளித்த ஐகோர்ட்: கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சகுந்தலா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இதனால் கடந்த 2002ஆம் ஆண்டு மனைவியை விட்டு செல்வராஜ் பிரிந்து சென்றார். இதற்கு அடுத்தநாள் இவர்களது குழந்தை சடலமாகக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, சகுந்தலாதான் குழந்தையைக் கொலை செய்ததாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். பின்னர் இந்த வழக்கு குறித்தான விசாரணை நடைபெற்று வந்தது.

பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் அவரது வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதனால் அவரது மனு ரத்து செய்யப்பட்டு மீண்டும் சகுந்தலா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து இவரின் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என கடந்த ஜூலை 8ஆம் தேதி உத்தரவிட்டனர்.

பின்னர் சகுந்தலாவின் வழக்கை மீண்டும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "சகுந்தலா தனது ஒன்றரை வயதுக் குழந்தையைக் கிணற்றில் வீசி கொலை செய்ததற்கு ஆதாரம் இல்லை. சாட்சிகளின் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் குடல் மற்றும் நுரையீரலில் தண்ணீர் இல்லை. கண் மூடிய நிலையில் குழந்தை இறந்து கிடந்தது எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே குழந்தை இறந்த பிறகே சடலம் கிணற்றில் வீசப்பட்டுள்ளது. சகுந்தலா பெற்றோர் வீட்டிற்கு தனியாகவே சென்றுள்ளார். குழந்தையை அழைத்துச் செல்லவில்லை. எனவே தண்டனையை ரத்து செய்கிறோம்” என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இதுகுறித்து சகுந்தலா கூறுகையில், "செய்யாத குற்றத்திற்காக 22 வயதில் சிறைக்குச் சென்றேன். வக்கீல் வைத்து வாதாட வசதியில்லாமல் சிறையிலேயே இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் வரை சென்ற தாமஸ் பிராங்க்ளின் பெரும் உதவியாக இருந்தார்.

அவருக்கும் வக்கீல் கவுதமன், சேது மகேந்திரன் ஆகியோருக்கும் நன்றி. நான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெற்றதற்கு அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read: சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய இளைஞர்.. மாட்டிவிட்ட தாய் : கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி சம்பவம்!