Tamilnadu

"எந்தச் சடங்கும் செய்யக்கூடாது; யாரும் அழக்கூடாது” : உயிலில் எழுதியபடி கழக முன்னோடியின் உடல் நல்லடக்கம்!

தி.மு.கழக முன்னோடி காஞ்சிபுரம் மே.சு.சண்முகசுந்தரம் மறைவையடுத்து, அவரது உடல் அவர் விருப்பப்படி எந்த சமய சடங்குகளும் பின்பற்றப்படாமல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தி.மு.கழக மூத்த உறுப்பினரும், காஞ்சிபுரம் மாவட்டக் கழகத்தின் முன்னோடியுமான மே.சு.சண்முகசுந்தரம் (88) கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி இயற்கை எய்தினார். அவர் 1950 ஆண்டு துவங்கி சுமார் 14 ஆண்டுகாலம் தி.மு.க.வின் மதுராந்தகம் வட்ட முதல் அவைத்தலைவராக விளங்கியவர்.

அறிஞர் அண்ணா, சி.வி.எம் அண்ணாமலை, சி.சீனிவாசன், கே.டி.எஸ்.மணி, சு.திருவேங்கடம், மதுராந்தகம் ஆறுமுகம், கொளத்தூர் கோதண்டம், வெங்கா போன்ற அந்நாள் செங்கற்பட்டு மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றியவர்.

கழகம் கண்ட அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்து பல முறை சிறை சென்றவர். கலைஞர் மீதும் தளபதி மு.க.ஸ்டாலின் மீதும் மாறா அன்பும், மதிப்பும் கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் தி.மு.கழக மூத்த முன்னோடியாக கருதப்படுபவர்.

அவரது மறைவுக்கு, ஆகஸ்ட் 23 அன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் உள்ளிட்ட தி.மு.கழக உடன்பிறப்புகள் பலரும் இறுதி மரியாதை செய்தனர்.

மறைந்த மே.சு.சண்முக சுந்தரம், கடந்த 2012ஆம் ஆண்டே தனது மறைவுக்குப் பிறகு செய்யவேண்டிய நடைமுறைகளை உயிலாக எழுதி வைத்துள்ளார்.

அந்த உயிலில், உடலைக் குளிப்பாட்டக்கூடாது, நெற்றியில் விபூதி, குங்குமம் வைக்கக்கூடாது என்றும், உடலுக்கு அருகில் அமர்ந்து அழக்கூடாது என்றும், எந்த சமய சடங்குகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, மறைந்த மே.சு.சண்முக சுந்தரம் அவர்களின் உடல் எவ்விதமான சமயச் சடங்குகளும் இன்றி வள்ளலார் காட்டிய வழிமுறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

Also Read: “ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது” : CCTV கண்காணிப்பில் உலக நகரங்களை பின்னுக்குத் தள்ளிய சென்னை!