Tamilnadu
"இவரையா காழ்ப்புணர்ச்சியோட செயல்படுறதா சொன்னீங்க..?” : பேரவையை நெகிழவைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், அ.தி.மு.க எம்.எல்.ஏவுமான அன்பழகன், ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் தி.மு.க அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
அவருக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் நாங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளவில்லை. அவ்வாறு நடந்து கொண்டிருந்தால் அம்மா உணவகம் தற்போது அதே பெயரில் செயல்பட்டு இருக்காது.” என்றார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “ஜெயலலிதா பெயரை வைக்கவேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழகம் கடந்த ஆட்சியில் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிதியோ இடமோ ஒதுக்கப்படவில்லை” என விளக்கமளித்தார்.
பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலுரை அளித்துப் பேசினார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.32,599.54 கோடி மக்களின் வரிப்பணம். அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
கடந்த ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட 65 லட்சம் விலையில்லா புத்தகப்பைகளில் முன்னாள் அ.தி.மு.க முதலமைச்சர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது குறித்து, முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டோம். அதனை ரூ.13 கோடி செலவில் மாற்றலாம் என்று யோசனை கூறினோம்.
ஆனால், இது மக்களின் வரிப்பணம். ரூ.13 கோடி இருந்தால் அதை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வேறு திட்டத்திற்குச் செயல்படுத்துவேன். அந்த புத்தகப்பையில் அவர்களின் படமே இருந்துவிட்டுப் போகட்டும் என பெருந்தன்மையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அத்தகைய தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் நமது முதலமைச்சர். இதையெல்லாம் உணராமல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாக குற்றம்சாட்டுவதா?” என்றார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!