Tamilnadu

“தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைத்துள்ளோம்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னையில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அரசின் கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போது கட்டுக்குள் இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இதன்மூலம் இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி விளங்குகிறது. 200 வார்டுகளில் 400 தடுப்பூசி முகாம்கள் மூலம் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழகத்தில் மொத்தமாக 5 லட்சம் வரை தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 2.95 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை 25 லட்சத்து 94,016 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி, 11 லட்சத்து 22,132 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 37 லட்சத்து 16,148 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து மாநகராட்சியின் சார்பில், ஒரு வார்டுக்கு 2 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என மொத்தம் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன.

இம்முகாம்களில் ஒரேநாளில் மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரத்து 147 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “எனது தாத்தா அங்கு வசித்ததில்லை”: பென்னி குக்கின் பேரன் Email-ல் விளக்கம் - தவிடுபொடியான பொய் பிரச்சாரம்!