Tamilnadu

‘தீரன்’ பட பாணியில் தனி வீடுகளை குறிவைத்து கொள்ளை : போலி பூசாரி உட்பட 8 பேர் கைது - ‘பகீர்’ சம்பவம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில மாதங்களாவே கோயில்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளன. இதனையடுத்து கொள்ளையடிக்கும் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து போலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

இதனிடையே கடந்த 20ஆம் தேதி மயிலம் அருகே அதிவேகமாக வந்து சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற கார் ஒன்றை வழிமறித்து போலிஸார் அதில் இருந்த எட்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 26 பவுன் தங்கம், 1 கிலோ வெள்ளி, ஆயுதங்கள் மற்றும் காரைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

மயிலம் பகுதியை குறிவைத்த இந்த 8 பேர் கொண்ட கும்பலில் போலி மதபோதகர் மற்றும் கோயில் பூசாரி என இருவர் உள்ளனர். இவர்கள் தனியாக உள்ள வீடுகளில் தோஷம் கழிப்பதாகக் கூறி வீடுகளுக்குள் சென்று பூஜை செய்து நோட்டமிட்டுள்ளனர். இவர்கள் நோட்டமிட்டுச் செல்லும் வீடுகளில் அடுத்த ஆறு பேர் கொள்ளையடித்து அந்தப் பணத்தை பங்கு பிரித்துக்கொள்வதாகவும் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாது, இவர்கள் கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதியாகவும், ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள வீடாகப் பார்த்து கைவரிசையை காட்டிவந்துள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Also Read: உலகத்திலேயே இப்படி ஒரு கட்சி நடத்தும் கரகாட்ட கோஷ்டி பா.ஜ.கதான்: ‘அந்த’ நடவடிக்கையால் கிளம்பிய விமர்சனம்!