Tamilnadu

”சட்டவிரோதமாக ரேசன் அரிசியை விற்றால் இதுதான் தண்டனை” - மதுரை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்!

கன்னியாகுமரியைச் சேர்ந்த குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேரந்த பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, சட்டவிரோதமாக கேரளாவிற்குக் கொண்டு சென்றதாக குழித்துறை போலீசார் தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தன்னிடம் இருந்து ரூ.1.24 லட்சம் மதிப்புள்ள 22 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளதாக வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, மனுதாரருக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கியிருந்தார். மேலும், மனுதாரரிடம் இருந்து எப்படி ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அரிசி ரேஷனில் வழங்கப்பட்ட அரிசி என்பது எப்படி அடையாளம் காணப்படுகிறது என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கையளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி, ரேஷன் கடைகளில் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது. இதை உறுதிபடுத்தி SMS அனுப்பப்படுகிறது.

ரேஷன் அரிசியை விற்பனை செய்வோரின் குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படுகிறது. போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ஒழிக்கப்படுகிறது. மே 7க்கு பிறகு புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட பலவற்றிலும் துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு சிறப்பு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

இதையடுத்து மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி, நீதிமன்றத்திற்கு விரைவாக புள்ளி விபரங்களை தந்த துரித செயல்பாட்டிற்கு தமிழக அரசு மற்றும் அரசு வழக்கறிஞருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.