Tamilnadu

"வறுமையால் நுங்கு விற்ற இசைக் கலைஞர்” : உடனடியாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை - வாகை சந்திரசேகர் உறுதி!

தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. 45 ஆண்டு காலம் வில்லிசைக் குழுவில் உடுக்கை இசைப்பவராக இருந்துள்ளார். கலைமாமணி விருது பெற்ற பலரோடும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

தற்போது 88 வயதாகும் நிலையில் முதுமை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுப்புற கலைஞர்களுக்கான ஓய்வூதியம் பெற விண்ணப்பித்து வந்துள்ளார். ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

பொருளாதார ரீதியில் நலிவடைந்த குருசாமி, நுங்கு விற்பது குறித்த செய்தி சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் குருசாமிக்கு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இசைக்கலைஞர் குருசாமி முன்னிலையில் இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பெரியவர் குருசாமியின் ஓய்வூதியம் தொடர்பான மனு நெல்லையில் உள்ள மண்டல கலைப் பண்பாட்டு மையத்தில் உள்ளது. நாளை அது இயல் இசை நாடக மன்றத்திற்கு கிடைக்கும். உடனடியாக அரசிடம் வழங்கி ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்தும் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைஞர்கள் சுமார் 6 லட்சம் பேர் வரை உள்ளனர். ஆனால் 38 ஆயிரம் பேர் வரை மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். அனைவரும் நல வாரிய உறுப்பினர் அட்டையைப் பெற விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம், உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை மிகவும் சிரமமாக உள்ளது. அதனை எளிமைபடுத்தி, 10 முதல் 15 நாட்களுக்குள் உறுப்பினர் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். இணைய வழியில் உறுப்பினர் சேர்க்கை நடத்தவும் வழிவகை செய்யப்படும்.

தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த நல வாரியம், கடந்த 10 ஆண்டுகளாக செயல்படவில்லை. ஆரம்பத்தில் 22 நலத்திட்டங்கள் இருந்தன. ஆனால் இரண்டு திட்டங்கள் மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளன. மறுபடியும் அந்த 22 திட்டங்களையும் முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல நலவாரிய கலைஞர்களைப் பயன்படுத்த அரசிடம் கோரவுள்ளோம். அது கலைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.

மேலும் நலவாரிய கோரிக்கைகளை முன்வைத்து மன்றத்திற்கும் நலவரியத்திற்கும் கூடுதல் நிதியை முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சரிடம் கேட்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, இயல் இசை நாடக மன்ற செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளவர் தொடர்பான குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த வாகை சந்திரசேகர், "அவர் கரகாட்டக் கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பரிசுகளை பெற்றுள்ளார். மேலும் நாட்டுப்புற கலைகள் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார்.

அவருக்கு சில எதிர்ப்புக் குரல்கள் இருப்பதை அறிந்தேன். ஆனால் அவையெல்லாம் அவரது பணிக்கு தடையாக இருக்காது. அரசு கவனத்தோடு ஆய்வு செய்தே தேர்வு செய்துள்ளது. தவறான புரிதலோடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது." என்றார்.

Also Read: “இனியொரு மரணம் வேண்டாம்; பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்”: மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு!