Tamilnadu

3வது அலை எச்சரிக்கை.. அதிநவீன வார்டு அமைக்கும் பணி விறுவிறு - மருத்துவ அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம், குழந்தைகளுக்கான அதி நவீன சிகிச்சை பிரிவு மற்றும் இன்போசிஸ் நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஏராளமானோர் உதவி வருகின்றனர். அந்த வகையில் இன்று இன்போசிஸ் நிறுவனம் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ஒரு கோடி மதிப்பிலான ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை வழங்கியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகள் மட்டும் இல்லாமல், அரசின் வற்புறுத்தலால் தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்ஜிசன் ஜெனரேட்டர்கள் அமைக்கட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலே முதன் முறையாக 36 மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் 55 மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்பட்டும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இது வெளியூர்களில் இருந்து வருபவர்கள், சென்னையில் இருந்து செல்பவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எந்த நேரத்திலும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வசதியாக இருக்கும். கொரோனா 3 ஆம் அலை வந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையத்தை துவங்க முதல்வர் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் எழும்பூர் மருத்துவமனையில் முதல்வர் இந்த திட்டத்தை துவங்கி சிறப்பு சிகிச்சை மையம் திறந்து வைத்தார்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை மையம் இருந்தாலும், 15 படுக்கைகளுடன் அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு கார்ட்டூன் வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு ரோட்டரி சங்கம் சார்பில் 30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 16 லட்சம் மக்களுக்கு 2 ஆம் தவணை தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ளது. கோவிஷீல்டு மருந்து தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதாகவும், கோவாக்சின் மட்டும் தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 4 லட்சம் கோவாக்சின் தட்டுப்பாடு இருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக ஒன்றிய அரசிடம் பேசி வருகிறோம். தமிழகத்தில் காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்பதைவிட, 30 ஆயிரம் கூடுதல் பணியிடங்கள் இருக்கிறது. அதில் ஒப்பந்த முறையில் பணியில் இருப்பவர்களை முறைப்படுத்துவது முதல் வேலை. அதன் பின்னர் காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என்று கூறினார்.

Also Read: கொரோனா விதிகளை மீறியதால் திருமண ஜோடிகளுக்கு இடையே நடந்த கைகலப்பு: குன்றத்தூர் கோவிலில் நடந்தது என்ன?