Tamilnadu

தொட்டால் உதிரும் சிமெண்ட்டை கண்டுபிடித்த ஓ.பி.எஸ் மீது விரைவில் கிரிமினல் நடவடிக்கை?

சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து, அங்கு சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று, அ.தி.மு.க ஆட்சியில் புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்றதாக கட்டப்பட்டது தொடர்பாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எம்.எல்.ஏ பரந்தாமன், “தொட்டால்சிணுங்கி செடி தெரியும்; தொட்டாலே உதிரும் சிமெண்ட்டை கண்டுபிடித்தவர்கள் கடந்த அ.தி.மு.க ஆட்சியாளர்கள். அந்தக் கட்டடத்தை கட்டியது யார் என்று கண்டுபிடித்து அவர்கள் எங்கெங்கெல்லாம் கட்டடம் கட்டி உள்ளனரோ அங்கெல்லாம் கட்டடங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

மிகக் குறுகிய காலத்தில் இந்த தரமில்லாத கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அந்த கட்டுமான நிறுவனம் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.

தரமற்ற கட்டிடங்களை கட்டிய துறைக்கு அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.” என்றார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தவறு செய்தது அதிகாரிகளாக இருந்தாலும் ஒப்பந்ததாரர்களாக இருந்தாலும் இந்த அரசு வேடிக்கை பார்க்காது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

Also Read: அடுத்த ரெய்டு விஜயபாஸ்கர்? - கர்ப்பிணி பெண்களுக்கான திட்டத்தில் கோடிகளில் கொள்ளையடித்த கேடிகள்!