Tamilnadu

தாயை இழந்த சிறுமிக்கு காவல்துறை சார்பில் உதவி.. இலுப்பூர் டி.எஸ்.பி-யின் மனிதநேயம் - குவியும் பாராட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் கடம்பராயன்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மலா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது 13 வயது மகள் ராஜிஸ்ரீ தாயை பறிகொடுத்த நிலையில், வயதான தந்தையுடன் வசித்து வந்தார்.

வயது முதிர்வு காரணமாக அவரது தந்தையால் வேலைக்குச் செல்ல முடியாததால், ராஜிஸ்ரீயும், அவரது தந்தையும் உணவுக்கு கூட வழியில்லாமல் சிரமம்பட்டு வந்துள்ளனர். மேலும் அக்கம்பக்கத்தினரும் உதவி புரியாமல் ஒதுங்கிக்கொண்ட நிலையில், காவல்துறையினர் அந்த சிறுமிக்கு உதவி செய்ய முன்வந்தனர்.

அந்தவகையில், சிறுமியின் நிலையை அறிந்த இலுப்பூர் டி.எஸ்.பி அருள்மொழி, விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக புதுக்கோட்டை மாவட்டம் கடம்பராயன்பட்டிக்குச் சென்றுள்ளார். அப்போது நிகழ்ச்சி முடிந்ததும், நேரடியாக சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு, சமைக்கத் தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.

மேலும், சிறுமிக்கு தேவையான உதவிகள் காவல்துறை சார்பில் செய்துகொடுக்கப்பட்டும் என உறுதியளித்துள்ளார். அதோடு சிறுமி கொடுத்த மனுவையும் பெற்றுக்கொண்ட டி.எஸ்.பி, இந்த கோரிக்கைகளை வருவாய்த்துறைக்கு தானே பரிந்துரை செய்வதாகக் கூறி சிறுமியை நெகிழச் செய்துள்ளார்.

கடந்த கால அ.தி.மு.க ஆட்சியில், காவல்துறையின் மீது மக்களுக்கு இருந்த மோசமான எண்ணங்களை மாற்றும்வகையில் பல மாவட்டங்களில் சிறப்பான நடவடிக்கையில் காவல்துறையினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ஒரே நாளில் மயானப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்... போராடி உயிரிழந்தவருக்கு மாவட்ட ஆட்சியரால் கிடைத்த நீதி!