Tamilnadu

"நீங்கதானே வாக்குறுதியை நிறைவேத்த சொன்னீங்க” : அ.தி.மு.கவினரை பங்கம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த, 2017 ஏப்ரல் 24ஆம் தேதி கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன. எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

கொடநாடு விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க ஆட்சியில் முறையான விசாரணை நடைபெறாத நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானிடம் நேற்று போலிஸார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்பிய அ.தி.மு.கவினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வெளிநடப்பு செய்த இ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளிட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் அ.தி.மு.கவினர் நடந்துகொண்டுள்ளனர். கொடநாடு கொலை கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம்.

கொடநாடு சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அறிவித்திருந்தோம்.

கொடநாடு குற்றச்சம்பவங்களில் நீதிமன்ற அனுமதியுடன் முறைப்படி விசாரணை நடக்கிறது. கொடநாடு வழக்கில் அரசியல் தலையீடோ உள்நோக்கமோ இல்லை. முறையான விசாரணை நடக்கிறது. அதன் அடிப்படையில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. சட்டத்தின் ஆட்சி நடக்கும். பழிவாங்கும் நடவடிக்கையில் தி.மு.க அரசு ஈடுபடவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினீர்களே. இதுவும் அதில் ஒன்று தான்.

மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியைத்தான் தற்போது நிறைவேற்றி வருகிறோம். இன்னும் பல இருக்கிறது. இதனை பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” எனப் பேசினார்.

Also Read: “உயிரைக் காப்பாத்துனது நீங்கதான்” : அமைச்சரிடம் கண்ணீர் மல்க நன்றி சொன்ன காவலர் குடும்பம்!