Tamilnadu

“தாய்மொழியில் அர்ச்சனை செய்வதே சரியானது” : முதலமைச்சரின் நடவடிக்கைகளை வரவேற்று சுகிசிவம் கருத்து!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதன் அடிப்படையில் மயிலாப்பூரில் நடைபெற்ற விழாவில் பயிற்சி முடித்த அர்ச்சகர்களுக்கு கடந்த 15ஆம் தேதி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதனை வரவேற்று ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் கூறுகையில், இந்து மதம் வளர வேண்டும் என்றால் அனைத்து சாதியினரும் குருமார்களாக (அர்ச்சகர்களாக) வரவேண்டும் என்றார். இதுகுறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் கூறியதாவது:-

இந்தியாவில் மதங்களின் வளர்ச்சியை நீங்கள் கூர்ந்து பாருங்கள். எல்லா சாதிகளிலிருந்தும் குருமார்கள் வருகிறார்கள். அப்போது குரு பீடத்திற்கு வருவதற்கு ஒரு குறிப்பிட் டசாதிதான் வர வேண்டும் என்பதற்கு தடை வைத்து இருந்தால்; இந்தியாவில் சாதி இருக்குமே தவிர இந்து மதம் இருக்க முடியாது. இந்து மதத்திற்கு வேறு வகையான சமூகத்திலிருந்தும் குருமார்கள் வரவேண்டும்.

இராமகிருஷ்ணரின் புரட்சி!

நான் ஒரு புரட்சி வரலாறு சொல்கிறேன். இராமகிருஷ்ணர் தன்னுடைய சாதியில் இருந்தா வாரிசைக் காட்டினார்? இல்லையே. இராமகிருஷ்ணர் சத்திரிய வம்சத்தைச் சேர்ந்த விவேகானந்தரை வாரிசாக எடுத்தார்.

தாய்மொழியில்தான் வழிபாடு!

உலகம் முழுவதும் இந்து மதம் போய் சேர்ந்ததா இல்லையா? அதே மாதிரி எல்லா சமூகத்தினரும் வருகிறபோது தான் இந்து மதம் பலமடையும்; வளமடையும் என்பது என்னுடைய தீர்க்கமான கொள்கை. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஏனென்றால் தாய்மொழியில் ஒருவர் உருக்கமாகவும், நெருக்கமாகவும் கடவுளை நெருங்குவது மாதிரி வேறு மொழியில் நெருங்க முடியாது.

நான் உதாரணமாக சொல்வதுண்டு. தியாகராயர் தெலுங்கு பாடுகிறவர். தமிழ்நாட்டில் அது ஏன்? தெலுங்கு அவருடைய தாய்மொழி! தாய்மொழி தான் கடவுளிடம் ஒருவன் நெருக்கமாக பேச முடியும் என்பதை அவர் கண்டிருக்கிறார். தஞ்சாவூரில் இருக்கிறார், திருவையாறில் இருக்கிறார், தமிழர்களுக்கு மத்தியில் இருக்கிறார். ஆனால், தெலுங்கில்பாடுகிறார் என்றால் அது ஏன்?

ஏனென்றால் தாய்மொழியில் பாடினால்தான் கடவுளிடம் அன்பும், நெருக்கமும் ஏற்படும் என்று தியாகராயர் வெளிப்படுத்தி இருக்கிறார். அதேமாதிரி தாய்மொழியில் கடவுளிடம் பேசிப் பாடுங்கள், திருவாசகம் சொல்லுங்கள், தேவாரத்தைச் சொல்லுங்கள் உங்க மனசு எப்படி உருகுது. கடவுளிடம் எப்படி நெருங்கலாம் என்பதைக் கண்டுபிடிக்கலாம். எனவே, தாய்மொழியில் வழிபாடு செய்வது தான் சரியான அணுகுமுறை.” இவ்வாறு ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் கூறினார்.

Also Read: “2 முறை வீரதீர செயல்களுக்கான உயரிய பதக்கம் பெற்று IPS அதிகாரி சாதனை” : யார் இந்த ஹரிபாலாஜி?