Tamilnadu

“கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8.03 லட்சம் நபர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும்” : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ-பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராகன் தாக்கல் செய்து உரை ஆற்றினார்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

தமிழ்நாட்டில் உள்ள 79,395 குக்கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கையும், அதுமட்டுமல்லாது, 83.92 லட்சம் குடும்பங்களுக்கு 2024 மார்ச்சுக்குள் குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க நடவடிக்கையும் எடுக்கப்படும்.

மேலும், 2021-22 ஆண்டில் ரூ.8017 கோடி செலவில் 2.89 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8.03 லட்சம் நபர்களுக்கு 5 ஆண்டுகளில் வீடுகள் கட்டித்தரப்படும். அதன்படி, கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி 3 கோடி ரூபாய் அளிக்கப்படும். கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். அதேபோல், ரூ.1,000 கோடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “காவல்துறைக்கு ரூ.8,930 கோடி நிதி ஒதுக்கீடு.. குற்றங்களை தடுக்க சிறப்பு நடவடிக்கை” : நிதியமைச்சர் உறுதி!