Tamilnadu
ரூ.2.89 கோடி வசூல் செய்து மோசடி... 1600 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சைபர் கிரைம் போலிஸ்!
பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் தாக்கல் செய்தனர்.
யூ-டியூபர் மதன் பப்ஜி விளையாட்டின் மூலம் ஆபாச பேச்சுக்களால் இளைய சமுதாயத்தினரின் மனதில் நஞ்சை விதைப்பதாக புகார்கள் மத்திய குற்றப்பிரிவு போலிஸாரிடம் குவிந்தன.
இதனையடுத்து பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் அவரை கடந்த ஜூன் 18ஆம் தேதி தருமபுரியில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதனுக்கு உடந்தையாக செயல்பட்டதாக அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பப்ஜி மதனின் 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.
மேலும், பப்ஜி மதன் பயன்படுத்தி வந்த யூ-டியூப், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன. கடந்த ஜூலை 5ஆம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதுதொடர்பான விசாரணை அறிவுரைக் கழகத்தில் நடைபெற்று வரும் நிலையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் பப்ஜி மதன் மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
குற்றப்பத்திரிக்கையில் முதல் குற்றவாளியாக மதனும் அடுத்ததாக அவரின் மனைவி கிருத்திகாவும் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு எதிரான 32 புகார்கள் மற்றும் 32 சாட்சியங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில் மதன் 2 ஆயிரத்து 848 பேரிடம் கொரோனா உதவி செய்வதாகக் கூறி 2.89 கோடி ரூபாய் பெற்று பண மோசடி செய்ததன் அடிப்படையில் அவர் மீது பண மோசடி (420) பிரிவின் கீழ் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் மதன் ஆபாசமாக யூ-டியூபில் பேசிய ஆடியோ சைபர் ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனவும் அது முடிந்தபின் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், 4 கோடி ரூபாய் பணம் சம்பந்தப்பட்டிருப்பதாக போலிஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
150 க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் 32 புகார்கள் மட்டுமே முறையான எழுத்துப்பூர்வ புகார்களாக ஆதாரங்களுடன் பெறப்பட்டுள்ளதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!