Tamilnadu

மக்களை தேடி மருத்துவத்தால் ஒரே வாரத்தில் இத்தனை பேர் பயனடைந்தார்களா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழக முதலமைச்சர் தொடக்கி வைத்த மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 7 நாட்களில் 60 ஆயிரம் பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சேலம் 5 ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் திரவ மருத்துவ ஆக்சிஜன் ஆலையை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து விழாவில் அவர் பேசும் போது, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கடந்த 7 நாட்களில் மட்டும் 60 ஆயிரம் பேருக்கு மருந்துகள் வழங்கபட்டு உள்ளதாக பேசிய அவர், உலகத்தில் பல நாடுகளில் மருத்துவம் இலவசம் என்று தெரிவித்து இருந்தாலும், அந்த மருத்துவத்தை மருத்துவமனைக்கு சென்றுதான் பெற வேண்டும், ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் வீடு தேடி சென்று இலவசமாக மருத்துவம் நடைபெறுகிறது என்று பேசிய அவர் இந்த திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்திற்குள் 1 கோடி பேருக்கு மருந்துகள் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், தெரிவித்தார்.

Also Read: மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.15 கோடி மணல் கொள்ளை; கண்டுகொள்ளாமல் இருந்த அதிமுக ஆட்சியாளர்கள்!

மேலும் அவர் பேசுகையில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைக்கு அனுமதி கேட்டால், அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளாண்ட் இருந்தால் மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் என்ற நிலை கடைபிடிக்கப்பட உள்ளதாகவும், இந்த நிலை இருந்தால் மட்டுமே கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்ற உயிர் இழப்பை தடுக்க முடியும் என்றார்.

மேலும் மூன்றாவது அலை வந்தால் அதனை சமாளிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளிலும் கட்டமைப்பு வசதிகள் செய்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து சேலம் நாராயண நகர் பகுதியில் சேலம் மாநகர திமுக முன்னாள் துணை செயலாளர் குணசேகரன் நடத்தி வரும் அண்ணா நூலகம் மற்றும் கணினி பயிற்சி மையத்தை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

Also Read: மேட்ரிமோனி மூலம் மோசடி... நகை பணத்தை அபேஸ் செய்த பெண்... கையும் களவுமாகப் பிடித்த திண்டுக்கல் இளைஞர்!