Tamilnadu

"கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்" : குற்றவாளி தமிழ்நாடு போலிஸிடம் சிக்கியது எப்படி?

சேலத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்குக் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதேபோல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் மிரட்டல் வந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் கேரள முதல்வர் அலுவலகம் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட ஐந்து இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து இரு மாநில போலிஸாரும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சேலம் நட்சத்திர விடுதிகளுக்கு மிரட்டல் வந்த செல்போன் எண்ணைக் கொண்டு போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த செல்போன் எண் சித்தனூரை சேர்ந்த ராணி என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த செல்போன் தொலைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். பிறகு அந்த எண் சேலம் சூரமங்கலம் பகுதியில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த பிரேம்ராஜ் என்பவர்தான் சேலம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் நடத்தியது தெரியவந்தது.

மேலும், இந்த நபர்தான் கேரள மாநில முதல்வர் அலுவலகத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்தாக போலிஸாரிடம் விசாரணையில் தெரிவித்துள்ளார். முந்திரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயற்சி செய்தாகவும் போலிஸாரிடம் பிரேம்ராஜ் தெரிவித்துள்ளார்.

Also Read: “செல்ஃபி மோகம்.. கூவம் ஆற்றில் விழுந்த வாலிபர்” : போராடி மீட்ட போலிஸார் !