Tamilnadu

வெளவால்கள் மூலம் பரவும் ‘மார்பர்க் வைரஸ்’.. கினியாவில் இருந்து பரவுகிறதா கொடிய நோய்? : உலக நாடுகள் பீதி!

சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே இன்னும் ஆட்டிப்படைத்து வருகிறது. உலகமே இந்த தொற்றை வீழ்த்த முடியாமல் தவித்து வரும் நிலையில், வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கோவிட் - 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, தேசிய, மாநில அளவில் மட்டுமே இது பெரும் அச்சுறுத்தலை தருகிறது என்றும் உலகளவில் இந்த வைரஸ் நோயின் தாக்கம் குறைவு என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக, மலைப் பகுதியில் உள்ள குகைகள் அல்லது சுரங்கங்கள், குடியிருப்பு காலணிகள் ஆகியவற்றில் இருக்கும் வெளவால்களிலிருந்து மார்பர்க் வைரஸ் நோய் பரவுகிறது.

இது, மனிதர்களுக்கு பரவும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களின் உடலிருந்து வெளியேறும் வியர்வையிலிருந்து இது மற்றவர்களுக்கு பரவுகிறது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த கொடிய வைரஸ் பாதிப்பால், 88 % பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது முதன்முதலில், கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி தெற்கு குக்கெடோ மாகாணத்தில் உயிரிழந்த நோயாளி ஒருவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் அவருக்கு மார்பர்க் வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கினியாவில் எபோலா நோய் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிய மார்பர்க் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Also Read: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : அ.தி.மு.க நிர்வாகி அருளானந்தம் ஜாமீன் மனு தள்ளுபடி - அடுத்து யார்?