Tamilnadu

ஒலிம்பிக் போட்டிக்காக துயரத்தை மறைத்த தாய்.. விமான நிலையத்தில் கதறி அழுத தமிழக வீராங்கனை - நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி. தடகள வீராங்கனையான இவர் தேசிய அளவில் பல்வேறு தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று, ஒலிம்பிக்கில் தடகள பிரிவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்குமுன் பஞ்சாப் மாநிலத்தில் பயிற்சி பெற்று, பின்னர் அங்கிருந்து டோக்கியோவுக்குப் புறப்பட்டுச் சென்றார். இதனிடையே கடந்த ஜூன் 12ம் தேதி தனலட்சுமியின் அக்கா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தனலட்சுமியின் கவனம் சிதறிவிடக்கூடாது என்பதற்காகத் அவரது தாயார் உஷா, அக்கா உயிரிழந்ததைத் தனலட்சுமியிடம் தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து, ஒலிம்பிக் போட்டி முடித்துவிட்டு, நேற்று திருச்சி விமான நிலையம் வந்த தனலட்சுமிக்கு அக்கா இறந்த செய்தியைக் கேட்டு அப்படியே தரையில் மண்டியிட்டுக் கதறி அழுதார். இது அங்கிருந்த அனைவரையுமே கண் கலங்கச் செய்தது.

பின்னர், தாயார் உஷா, மகள் தனலட்சுமியை சமாதானப்படுத்தி விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒலிம்பிக்கில் விளையாடிய அனுபவத்தை தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read: “தங்க மகனுக்கு உயர்தர உணவை கூட மோடி அரசு ஏற்பாடு செய்யவில்லை” : நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் ஆதங்கம்!