Tamilnadu

“ஒடஞ்சிருந்தாலும் தங்கம் சார்” : அதிதி அசோக் பெருமிதமிக்க தோல்வி!

இந்தியர்களுக்கு அந்நியமான விளையாட்டாகவே கோல்ஃப் இருந்தது. மற்ற விளையாட்டுகளில் காட்டும் ஆர்வத்தில் துளி கூட கோல்ஃபில் காட்டமாட்டார்கள். பணக்காரர்களுக்கான விளையாட்டாக மட்டுமே அறியப்பட்டதும் இதற்கு ஒரு காரணம். ஆனால், இதையெல்லாம் அதிதி அசோக் ஒரே நாளில் உடைத்தெறிந்துவிட்டார்.

கோடிக்கணக்கான இந்தியர்களை தொலைக்காட்சி முன்பு நான்கு மணி நேரம் அமர்ந்து கோல்ஃப் பார்க்க வைத்துவிட்டார். இதுவே மிகப்பெரிய சாதனைதான். 23 வயதாகும் அதிதி அசோக் கடந்த ரியோ ஒலிம்பிக்கிலேயே கலந்துக்கொண்டிருந்தார். அப்போது 41 வது இடம்பிடித்திருந்தார். அதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இந்த முறையுமே அவர் மீது துளி கூட எதிர்பார்ப்பு இருக்கவில்லை. தரவரிசையில் 200 வது இடத்தில் இருந்தார்.

ஆனால், இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கின் கோல்ஃப் போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் நபர் அவர்தான். இதன்பிறகுமே அவர் மீது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. கோல்ஃபெல்லாம் பணம் படைத்த மேலை நாட்டவரின் விளையாட்டு. அதில் இந்தியர் ஒருவர் சாதிப்பதெல்லாம் நடக்காத காரியம் என்றே நினைத்திருந்தனர். ஆனால், அதிதி டோக்கியோவில் செய்திருந்தது மேஜிக்.

முதல் நாளிலிலிருந்தே சிறப்பாக ஆடினார். முதல் நாளில் பந்தை அடிக்கவேண்டிய 18 குழிகளுக்கு, வழங்கப்பட்டிருந்த 71 வாய்ப்புகளில் 67 வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்தி அசத்தியிருந்தார். இரண்டாவது நாளில் 66 வாய்ப்புகள். நான்காவது நாளில் 68 வாய்ப்புகள். மூன்று நாள் முடிவில் மொத்தம் கொடுக்கப்பட்ட 213 வாய்ப்புகளில் 201 வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்தி Under 12 எடுத்து இரண்டாம் இடத்தில் இருந்தார். இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்தது. பதக்க வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

இதன்பிறகே, அதிதி மீது எதிர்பார்ப்பு எகிறியது. இந்திய வீராங்கனை ஒருவர் பதக்கம் வெல்லப்போகிறார் என்றவுடன் ஒட்டுமொத்த மக்களுமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இதுவரை காணாத கோல்ஃப் போட்டியை அதிகாலை அலாரம் வைத்து எழுந்து பார்த்தனர். இன்றும் அதிதி கொஞ்சம் நன்றாகவே தொடங்கியிருந்தார். முதல் நான்கு குழிகளில் Par எடுத்தவர். அடுத்தடுத்து 2 Birdie க்களை எடுத்து இரண்டாம் இடத்திலேயே தன்னை தக்கவைத்திருந்தார். ஆனால், கொஞ்சம் நேரத்திலேயே சறுக்கினார்.

9 மற்றும் 11 வது குழிகளில் கொடுக்கப்பட்ட வாய்ப்பை விட அதிகம் எடுத்து Bogey வாங்கினார். இதன்பின், ஏற்ற இறக்கமாகவே சென்று கொண்டிருந்தார். கடைசி ஒரு குழி மட்டுமே எஞ்சியிருக்கும் போது நான்காவது இடத்தில் இருந்தார். இந்த குழியில் Birdie எடுத்துவிட்டால் வெண்கல பதக்கம் வெல்லும் வாய்ப்பு இருந்தது. குழிக்கு அருகில் பந்து இருக்க அதிதி தட்டிவிட்டார். அது நூலிழையில் குழியை தாண்டி சென்றது. இதனால் அதிதியால் Par மட்டுமே எடுக்க முடிந்தது. அதிதிக்கு முன்பிருந்த வீராங்கனைகளை Under 16 எடுத்திருந்தனர். அதிதி Under 15 எடுத்திருந்தார். ஒரே ஒரு ஸ்ட்ரோக்கில் பதக்க வாய்ப்பு பறிபோனது.

அதிதியின் தோல்வி ஏமாற்றம்தான் என்றாலும், இது பெருமிதமிக்க தோல்வியே. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு புது விளையாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார். எல்லாராலும் ஆடமுடியாத விளையாட்டு என்றாலும், குறைந்தாலும் எல்லாராலும் பார்க்கக் கூடிய விளையாட்டு என்ற நிலைக்கு கோல்ஃபை கொண்டு வந்துள்ளார். இதுவே தங்கப்பதக்கம் வாங்கியதற்கு சமம்.

-உ.ஸ்ரீ

Also Read: “நூற்றாண்டு காணப்போகும் கலைஞர் புகழ், 1,000 ஆண்டுகள் நிலைத்திருக்க பணியாற்றுவோம்” : மு.க.ஸ்டாலின் சூளுரை!