Tamilnadu
மக்கள் உடல்நலன் சார்ந்த திட்டம்: இந்தியாவுக்கே முன்மாதிரியான முதல்வராக திகழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் பின்வருமாறு:
நாட்டிலேயே முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சாமனப்பள்ளி கிராமத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் காலக்கட்டத்தில், மக்களை தேடி வரும் இந்த மருத்துவ திட்டம் மக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது. கடந்தாண்டு கொரோனா பரவலால் பலர் பாதித்து வந்த நிலையில், நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, டயாலிசிஸ் நோயாளிகள் உரிய சிகிச்சைகளை பெற முடியவில்லை.
மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்று அச்சத்தால், அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள இயலவில்லை. இதனால் பலர் நோய் தீவிரமடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டது. இரண்டாம் அலை தீவிரமடைந்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் தான் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது. ஆனாலும், தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியது.
வடமாநிலங்களை போல பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய மருத்துவ மையங்கள் அதிகளவு உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கைகள், இட வசதிகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக ‘வார் ரூம்’ எனப்படும் கட்டளை மையங்களை உருவாக்கியது, தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது, 3 மண்டலங்களாக பிரித்து தளர்வுகளை அறிவித்தது என தமிழக அரசின் திட்டமிட்ட செயல்பாடுகள், கொரோனா பரவலை வெகுவாக கட்டுப்படுத்தியது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோரின் நலன் கருதி துவங்கி உள்ள ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் ஒட்டுமொத்த இந்தியாவின் ஆச்சரியப் பார்வையை தமிழகத்தின் பக்கம் திருப்பி இருக்கிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில், 1,172 சுகாதார மையங்கள், 189 ஆரம்ப சுகாதார மையங்கள், 50 சமூக சுகாதார மையங்களில் இத்திட்டம் துவங்கி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி சுமார் 30 லட்சம் பேர் வரை கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வீடு, வீடாக சென்று மருந்துப்பெட்டிகள், சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் 250 கோடி வரை இத்திட்டத்திற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது. நகர் பகுதி, கிராமப்புற மற்றும் மலைக்கிராம மக்களும் இதன்மூலம் பயனடைய உள்ளனர். இந்த ஆண்டின் முடிவில் சுமார் ஒரு கோடி பேர் வரை இத்திட்டத்தில் சேர்ப்பதற்கான முயற்சியில் அரசு இறங்கி உள்ளது.
பொதுவாக, எந்த ஒரு திட்டமும் மக்கள் பயன் சார்ந்தே இருக்கும். ஆனால், மக்கள் உடல்நலன் சார்ந்த ஒரு திட்டத்தை துவக்கி வைத்து, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியான முதல்வராக திகழ்கிறார் மு.க.ஸ்டாலின். தொடங்கியதோடு அல்லாமல் வீடு தேடி சென்று, மருந்துப்பெட்டிகளை வழங்கியது, சிகிச்சை முறைகளை பார்வையிட்டது மக்களிடையே பெரும் வரவேற்ைப பெற்றுள்ளது. ஆரோக்கியமான அரசு அமைய வேண்டுமென்பது தான் மக்களின் பொது விருப்பமாக இருக்கும். ஆனால், முதன்முறையாக மக்களின் ஆரோக்கியம் நாடும் அரசு அமைந்துள்ளது வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!