Tamilnadu

“பா.ஜ.க உண்ணாவிரதம் நகைப்புக்குரியது.. நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு மோடியே காரணம்”: திருமாவளவன் பேட்டி!

அரியலூர் மாவட்டத்தில்‌ அச்கனூர் கிராமத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தொல்.திருமாவளவன் எம்.பி சென்றிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் எம்.பி பேசுகையில், “சோழப் பேரரசின் மாமன்னனாக திகழ்ந்த ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் என்று எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் அவரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்பது தமிழ் மக்களின் எண்ணமாக உள்ளது. எனவே இதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரை போற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு முடக்கி வருவதாக பிரதமர் மோடி கூறுவது மிகப் பெரிய நகைச்சுவையாக உள்ளது. பெகாசஸ், வேளாண் சட்டம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பது நாடாளுமன்றம் முடங்குவதற்கு காரணமாகும். எனவே நாடாளுமன்றம் முடங்குவதற்கு மோடியே காரணம்.

மேகதாது பிரச்சினையில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது. மேகதாது அணை கட்ட கூடாது என பா.ஜ.க உண்ணாவிரதம் இருப்பது நகைப்புக்குரியது. கர்நாடகாவில் ஆளுகின்ற பா.ஜ.கவின் முதலமைச்சரை சந்தித்து மேகதாது அணை கட்டும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தாமல் இவ்வகை உண்ணாவிரதம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் விவசாய பெருமக்களின் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் விவசாயம் வளர்ச்சியடைவதோடு அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: Amazon primeஐ குத்தகைக்கு எடுத்த சூர்யா - ஜோதிகா ஜோடி : அடுத்த 4 மாதத்திற்கு வரிசை கட்டும் புது படங்கள் !