Tamilnadu

“மோடியின் நண்பருக்கு எதிராக கொந்தளித்த சிவசேனா தொண்டர்கள்” - என்ன காரணம்?

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த விமான நிலையங்களில், பெரும்பாலான விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மும்பை விமான நிலையத்தை ஜி.வி.கே நிறுவனம் பராமரித்து வந்தநிலையில், அதன் பங்குகளை அதானி நிர்வாகம் சமீபத்தில் வாங்கியது.

இதனையடுத்து நிர்ப்பந்தம் காரணமாக முழு பங்கையும் ஜி.வி.கே நிறுவனம் விற்றுவிட்ட நிலையில், மும்பை விமான நிலையத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது அதானி நிறுவனம். இதோடு நாடு முழுவதும் 8 விமான நிலையங்களை தனது கட்டுப்பாட்டில் அதானி நிறுவனம் வைத்துள்ளது.

இந்நிலையில் மும்பை விமான நிலைய பராமரிப்பு பணியில் ஈடுபட்ட அதானி நிறுவனம், விமான நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் “சத்ரபதி சிவாஜி” விமான நிலையம் என்று இருந்த பெயர்ப் பலகையை நீக்கியது. அதோடு இல்லாமல், அந்த இடத்தில் “அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் லிமிடெட்” என்ற பெயர்ப் பலகையை நிறுவியது.

இது அம்மாநில மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் ஆத்திரமடைந்த சிவசேனா கட்சித் தொண்டர்கள் அந்த பெயர்ப் பலகையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதுமட்டுமல்லாது, “சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்” என்ற பெயர்ப்பலகையை மீண்டும் அங்கு நிறுவினர்.

மாநில மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடாமல், தங்களது தொழிலை அதானி நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிவசேனா கட்சித் தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: திருத்தணி அருகே தொழிலதிபர் தம்பதியினரை கடத்தி கொலை : அ.தி.மு.க பிரமுகரின் மகன் உட்பட 3 பேர் கைது!