Tamilnadu

”கார்டு மேல 16 நம்பர் சொல்லு சார்” எனக் கூறி ரூ.1 லட்சம் சுருட்டல் - வசமாக சிக்கிய டெல்லி மோசடி கும்பல்!

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் கடந்த 04.01.2021ம் தேதி செல்போனில் பேசிய அறிமுகமில்லாத நபர் SBI வங்கியிலிருந்து பேசுவதாக அறிமுகபடுத்தி கொண்டு கிரெடிட் கார்டுக்கு பரிசு பொருள் வந்திருப்பதாகவும் உடனடியாக கிரெடிட் கார்டின் விவரங்களை கூறினால் உடனடியாக கிடைக்கும் என்றும் இல்லையென்றால் பரிசு பொருள் கிடைக்காது என ஆசை வார்த்தை கூறி இவரின் SBI மற்றும் HDFC வங்கி கிரெடிட் கார்டுகளின் எண்கள், ரகசிய குறியீட்டு எண்களை கேட்டு (OTP) பெற்று அந்த தகவலை உபயோகித்து அடுத்த சில நிமிடங்களில் கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து ரூ. 1,08,740/- ஐ எடுத்து ஏமாற்றி விட்டனர்.

இது தொடர்பாக கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின் பேரில் டெல்லியில் முகாமிட்டு தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் S.பிரபாகரன், ஆய்வாளர் புஷ்பராஜ், உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், சுரேஷ்குமார், தலைமை காவலர்கள் ஜெகந்நாத், ஸ்டாலின், கோமதி, சுபஜாராணி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் மேற்படி மோசடி கும்பலுக்கு உதவியாக இருந்த டெல்லி ஜோரிபூரை சேர்ந்த அதுல்குமார் மற்றும் காசியாபாத்தை சேர்ந்த குணால் ஆகியோரை 30.07.2021 அன்று கைது செய்து ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தும் டெல்லி கர்கர்டுமா நீதிமன்றத்தில் ஆஜர் செய்து டிரான்சிட் ரிமாண்ட் உத்தரவுபடி இன்று எழும்பூர் சிசிபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புலன் விசாரணையில் மோசடி பேர்வழிகள் டெல்லி, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் போலியான கால்சென்டர்கள் வைத்து தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் செல்போனில் வங்கியிலிருந்து பேசுவதாக சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு பரிசு தொகை வந்திருப்பதாக கூறி கிரெடிட் கார்டு எண்கள் மற்றும் ரகசிய குறியீட்டு எண் விவரங்களை பெற்றும் டெல்லியில் ஏஜென்சிகள் மூலம் மின்கட்டணம் செலுத்துவோரின் மின்கட்டண விவரங்களை டெல்லி ஏஜெண்டுகளிடமிருந்து பெற்றும் அந்த மின்கட்டணங்களை தமிழ்நாட்டிலிருந்து பெற்ற கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து பணத்தை செலுத்தி பின் மேற்படி ஏஜென்சிகளுக்கு அதிகப்படியான கமிஷன் தொகை கொடுத்து அவர்களிடமிருந்து ரொக்கமாக பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

மேற்படி அதுல்குமார் மற்றும் குணால் ஆகியோர் அதிக கமிஷனுக்கு ஆசைபட்டு மின்கட்டணத்தை மேற்படி மோசடி பேர்வழிகள் மூலம் செலுத்தியது தெரிய வந்து கைது செய்யப்பட்டனர். மற்ற நபர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர். செல்போன் மற்றும் DTH ரீசார்ஜ் போன்றவற்றின் மூலமாகவும் மேற்படி மோசடி பேர்வழிகள் ஈடுபட்டுள்ளனரா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்டுக்கு உச்ச வரம்பை உயர்த்துவதாக கூறியோ, பரிசு தொகை வந்துள்ளது என்றோ, ரிவார்டு பாயிண்டுகள் வழங்குவதாக கூறியோ, ஏ.டி.எம். கார்டு முடக்கப்பட்டுள்ளது, வங்கி கணக்கை ஆதார் கணக்குடன் இணைக்க வேண்டும், கொரோனா நிவாரண தொகை வந்துள்ளதாக கூறி வங்கி கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு / ஏ.டி.எம். கார்டு எண்கள், ரகசிய குறியீட்டு எண்களை நபர்களிடம் எந்த தகவலையும் தர வேண்டாம் என்றும் உஷாராக இருக்குமாறும் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்களது செல்போன், DTH போன்றவற்றை ரீசார்ஜ் செய்யும்போது அங்கீகரிக்கப்படாத ஏஜென்சிகளிடம் செய்ய வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.