Tamilnadu

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு.. 400 பக்க குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், முன்னாள் டி.ஜி.பி மீது 400 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலிஸார் தாக்கல் செய்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்தபோது காவல்துறை சிறப்பு டி.ஜி.பியாக பணியாற்றி வந்த ராஜேஷ் தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறை சிறப்பு டி.ஜி.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலிஸார், முன்னாள் டி.ஜி.பி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மீது குற்றப் பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலிஸார் இன்று தாக்கல் செய்தனர்.

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மீது 400 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.

Also Read: “திருந்தி வாழ போறேன்.. இனி எந்த தப்பும் பண்ணமாட்டேன்” : பா.ஜ.க ரவுடி போலிஸில் பரபரப்பு மனு!