Tamilnadu

டோக்கியோ ஒலிம்பிக்கின் இன்றைய நாள் : பதக்கத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தொடர் தோல்வி - ஏமாற்றம் !

டோக்கியோ ஒலிம்பிக்கின் இன்றைய நாள் இந்தியாவிற்கு ரொம்பவே மோசமாக அமைந்திருக்கிறது. பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள போட்டிகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்/வீராங்கனைகள் எல்லாம் தோற்றிருக்கிறார்கள்.

இன்று அதிகாலையிலேயே துப்பாக்கிச்சுடுதலில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் மனு பாகெர் - சௌரப் சௌத்ரி, அபிஷேக் வெர்மா - யாஷஸ்வினி என இரண்டு இணை பங்கேற்றிருந்தது. இதில், அபிஷேக் - யாஷஸ்வினி இணை முதல் சுற்றுடனேயே வெளியேறிவிட்டது.

மனு - சௌரப் இணை முதல் சுற்றில் முதலிடம் பிடித்திருந்தது. ஆனால், இரண்டாவது சுற்றில் ஏமாற்றமளிக்கும் வகையில் ஏழாம் இடமே பிடித்தது. இந்த கூட்டணி நிச்சயம் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், பயங்கர சொதப்பலாக ஆடி ஏமாற்றியிருந்தார்கள்.

இதன்பிறகு, 10 மீ ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் நடைபெற்றது. இதில் இளவேனில் வாலறிவன்-திவ்யான்ஷ், தீபக் குமார்-அஞ்சும் மோக்டில் என இரண்டு இந்திய இணைகள் பங்கேற்றனர். இரண்டு இணையுமே முதல் சுற்றோடு வெளியேறியது. வாலறிவன்-திவ்யான்ஷ் இணை 12 வது இடத்தையும், தீபக் குமார்-அஞ்சும் இணை 18 வது இடத்தையுமே பிடித்தனர். இவர்களின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

டேபிள் டென்னிஸில் 39 வயதாகும் தமிழக வீரர் சரத் கமல் சீனாவை சேர்ந்த உலகின் நம்பர் 2 வீரரான மா லிங்குடன் மோதி தோற்றிருந்தார். விடாப்பிடியாக முட்டி மோதியே தோல்வியை தழுவியிருந்தார் சரத் கமல். மா லிங்குக்கு எதிராக ஒரு செட்டை கச்சிதமாக இவர் வென்றதே பெரிய ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. இதுவரை 4 ஒலிம்பிக்கில் ஆடிவிட்டார் சரத் கமல். அடுத்த ஒலிம்பிக்கில் ஆடுவது சந்தேகமே. டோக்கியோவே அவரின் கடைசி ஒலிம்பிக்காக இருக்க வாய்ப்பிருக்கிறது.

பேட்மிண்டனில் சிராக்-சாத்விக் ஜோடி பிரிட்டனுக்கு எதிரான போட்டியை ஜெயித்திருந்தாலும், புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் அடுத்தச்சுற்றுக்கு தகுதிப்பெற முடியாமல் போனது.

ஒரே ஒரு ஆறுதலாக இந்திய ஹாக்கி அணி ஸ்பெயினுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் ரூபிந்தர் சிங் பால் 2 கோல்களையும் சிம்ரன்ஜித் சிங் ஒரு கோலையும் அடித்திருந்தனர்.

இன்றைய நாளில் பதக்கத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தொடர் தோல்விகளால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

-உ.ஸ்ரீ

Also Read: பதக்க வாய்ப்பு நழுவியது: இந்தியாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.. மனு - சௌரப் கூட்டணி அதிர்ச்சி தோல்வி!