Tamilnadu
“தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (23.7.2021) தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படைவீரர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
“தலைநிமிரும் தமிழகம்" தொலைநோக்குத் திட்டங்களில் அறிவுறுத்தியபடி வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் பேணிடவும், அங்குப் பாதிப்புக்கு உள்ளானோர்க்கு உதவிடவும், நாடு திரும்பிய வெளிநாடுவாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்குத் துணை நிற்கவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற ஒரு புதிய துறையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வழிகாட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கும், குடிநீர், கழிவறை வசதி, தெருவிளக்கு, மின்வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், மாதாந்திர பணக் கொடையை உயர்த்தி வழங்கிடவும், சமையல் பாத்திரங்கள் மற்றும் துணிமணிகள் வழங்குவதற்கான ஒதுக்கீட்டையினை உயர்த்தி வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டார். மேலும், இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்குத் காப்பீட்டுத் திட்டம், அடையாள அட்டை, கட்டணமில்லா தொலைபேசி உதவி மையம், வெளிநாடு வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை இணைய வழியில் கற்பிப்பதற்குத் தமிழ் இணையக் கல்விக் கழகம் அமைப்பது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
புதியதாக முன்னாள் படைவீரர் நல அலுவலகங்கள் தோற்றுவிக்க ஆய்வுகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய முதலமைச்சர் அவர்கள், முன்னாள் படைவீரர் நலவாரியத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குப் பயனளிக்கும் வகையில், திறன்மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!