Tamilnadu

"அண்ணாமலை பல்கலைக்கழக ஊழலை விசாரிக்க கமிட்டி": அமைச்சர் பொன்முடி அதிரடி!

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 12ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத ஒருவர் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, தகுதிக் குறைவான பேராசிரியர்கள் நீக்கப்படுவார்கள் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கஞ்சனூர், வெங்கந்தூர், வீரமூர், மங்களபுரம், கக்கனூர், காணை ஆகிய கிராமங்களில், புதிய பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

பின்னர் கக்கனூர் கிராமத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,"ஜெயலலிதா பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? அது பெயரளவில்தான் உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை இணைப்புப் பல்கலைக்கழகமாக மாற்றியுள்ளோம். அ.தி.மு.க ஆட்சியில் தலைவர் கலைஞர் தொடங்கி வைத்த சட்டப்பேரவை வளாகத்தையே மாற்றவில்லையா? ஜெயலலிதா பல்கலைக்கழகம் என அறிவித்தார்கள், அவ்வளவுதான். தொடங்கி வைத்தார்கள் என்று இதனைச் சொல்ல முடியாது.

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழலை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிக் குறைவானவர்களாக நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீக்கப்பட்டு முறையாக சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் எனச் சொல்லியுள்ளோம். முதலில் டிஆர்பியில் நேர்முகத் தேர்வு நடத்தப்படவில்லை. கவுரவப் பேராசிரியர்களை நியமிக்க கமிட்டி போடப்பட்டதே தவிர, டிஆர்பியோ, டிஎன்பிஎஸ்சியோ நியமிக்க வேண்டும் என்று செய்யவில்லை. அதனால் அந்த நியமனத்தையும் நிறுத்தி வைத்துள்ளோம். இவையெல்லாம் பட்ஜெட் வரும்போது அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: "சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை" : அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!