Tamilnadu
2008-ஆம் ஆண்டே ஒட்டுக்கேட்ட அமித்ஷா? : ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ விவகாரத்தில் வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்!
இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ. குழுமத் தயாரிப்பான ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ (Pegasus spyware) என்ற உளவு மென்பொருள் மூலம்இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் கள், பத்திரிகையாளர்கள் 300 பேர் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
செல்போனில் ஊடுருவி வேவுபார்க்கும் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ என்ற இந்த உளவு மென்பொருளை, அரசாங்கங்களுக்கும், அரசாங்க ஏஜென்சிகளுக்கு மட்டுமே விற்பனை செய்ததாக இஸ்ரேல் நாட்டின்என்.எஸ்.ஓ. குழுமம் கூறுவதால், இந்திய அரசுதான் இந்த மென்பொருளை விலைக்கு வாங்கி, வேவு வேலைக்குப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
குறிப்பாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதன் பின்னணியில் இருப்பதாக அவர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ஒன்றிய அரசோ அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், அமித்ஷா குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோது கடந்த 2008-ஆம் ஆண்டே இஸ்ரேல் தயாரிப்பு உளவுக் கருவி பற்றி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஊடகவியலாளர் ராஜ்தீப் சரதேசாய் கடந்த 2019-ஆம் ஆண்டு எழுதிய ‘மோடி எப்படி வென்றார்?’ (‘2019: How Modi won India’), என்ற நூலின் 42-ஆவது பக்கத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மலையாளத்தில் வெளியாகும் ‘மாத்ருபூமி’ ஏடு இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், “2008-09 காலகட்டத்தில், குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது ஐ.பி.எஸ் அதிகாரிகள் கூட்டத்தில் ‘ஒட்டுக்கேட்பு’ பற்றி அமித்ஷா பேசியுள்ளார். இஸ்ரேலிய இயந்திரம் ஒன்றில் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்து எந்த தொலைபேசி உரையாடலையும் கேட்கலாம் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
‘நீங்கள் ஒரு குறியீட்டை உள்ளிடவேண்டும், பின்னர் நீங்கள் விரும்பும் தொலைபேசி உரையாடலைக் கேட்கலாம்’ என்று கூறி அமித்ஷா சிரித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகளில் இருவர், தங்களின் போனும் உளவு பார்க்கப் படலாம் என்று பயந்து, தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு புதிதாக செல்போன் வாங்கினர்” என்று ஊடகவியலாளர் ராஜ்தீப் சரதேசாய் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
காந்தி நகரைச் சேர்ந்த ராஜீவ்ஷா என்ற செய்தியாளர் மூலமாக தனக்கு இந்த தகவல்கள் கிடைத்ததாக கூறியிருக்கும் ராஜ்தீப் சர்தேசாய், எனினும் குஜராத் அரசு இஸ்ரேலில் இருந்து அந்த உளவுக் கருவியை வாங்கியதா? எந்த அளவிற்கு அதை பயன்படுத்தினார்கள் என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எந்த வகையில் பார்த்தாலும், ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ வேவு வேலையின் சூத்திரதாரி அமித்ஷா-தான் என்பது, இந்த நூல்குறிப்பு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
‘பெகாசஸ் ஸ்பைவேர்’ விவகாரம் 2016-ஆம் ஆண்டிலேயே வெளிப்படத் துவங்கிவிட்டது. முதலில் ஐபோன் பயனர்களையே இது குறிவைப்பதாக கூறப்பட்டது. பின்னர் 2019-இல் இந்தியா உள்ளிட்ட பலநாடுகள், தங்களின் வேவுப் பணிக்காக ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ மென் பொருளை பயன்படுத்துவதாக பகிரங்கமாகவே குற்றச்சாட்டு எழுந்தது. ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ போன்ற ஆபத்தான வேவு மென்பொருள், இந்தியாவில் ‘வாட்ஸ்ஆப்’ என்னும் சமூக ஊடகம் வழியாக ஊடுருவுகிறது; தகவல்களைத் திருடுகிறது என்று கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. ராகேஷ் நாடாளுமன்றத்தில் முதன்முதலில் பிரச்சனை கிளப்பினார்.
ஆனால், அதனை ‘அதிகாரப்பூர்வமற்ற கண்காணிப்பு’ (Unauthorized Surveillance) என்று கூறிய - அன்றைய ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ செயலி மூலம் 121 பேரின் வாட்ஸ்அப் எண்கள் வேவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்பதையும் அப்போதே வெளிப்படையாக ஒப்புக்கொண் டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :- தீக்கதிர்
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!