Tamilnadu

முதியவரின் இடத்தை அபகரிக்க முயலும் அ.தி.மு.க முன்னாள் MLA.. தாசில்தார் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தரமணியில் முதியவரின் இடத்தை அபகரிக்க முயலும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ, தொடர்பாக முதியவர் தொடர்ந்த வழக்கில் இடம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தாசில்தாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தரமணி, அண்ணா தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுப்பையா (75). இவர் தனது அண்ணன் சின்னையா (80) உள்ளிட்டோருடன் சிமெண்ட் சீட் மற்றும் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார்.

அவரது இடத்தை கோவிந்தராஜ் என்பவர் அபகரிக்க முயன்றுள்ளார். வேளச்சேரி முன்னாள் எம்.எல்.ஏவும், அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான எம்.கே.அசோக் கோவிந்தராஜுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார்.

இதுகுறித்து பல ஆண்டுகளாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதிகாரிகளிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நீதிமன்றத்தின் கதவுகளையும் பலமுறை தட்டியுள்ளார் சுப்பையா.

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.அசோக்கின் ஆதரவாளர்களான நித்தியானந்தம், விஸ்வநாதன் ஆகியோர் சுப்பையா மற்றும் அவரது அண்ணனை கொலை செய்து விடுவதாக மிரட்டியதோடு, சாதி ரீதியாகவும் துன்புறுத்தி உள்ளனர்.

முதியவர் சுப்பையா தனது இடத்தை மீட்க 25 ஆண்டு காலமாக போராடி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், இடம் தொடர்பாக விசாரித்து, அளவை செய்து அதன் தன்மை குறித்து இன்று ஆய்வு செய்து 23ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேளச்சேரி தாசில்தாருக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவையடுத்து வருவாய்த் துறையினர் இடத்தை ஆய்வு செய்தனர். முதியவரின் இடத்தை அபகரிக்கத் துணைசெல்லும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.அசோக்கிடமிருந்து இடம் மீட்கப்பட்டு விரைவில் அவரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: “கொங்கு மண்டலம் தி.மு.க-வின் கோட்டையாக மாறும்” - அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோவிந்தராஜன் பேட்டி!