Tamilnadu

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தை.. சம்மன் பெறாமல் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடிய ஆசிரியைகள்: போலிஸ் வலைவீச்சு!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா. இவர் மீது அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து, சிவசங்கர் பாபாவைக் கடந்த மாதம் 16ம் தேதி சி.பி.சி.ஐ.டி போலிஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும், சிவசங்கர் பாபா மீது மொத்தம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் வழக்கில் கடந்த மாதம் 16ஆம் தேதி கைது செய்த நிலையில், கடந்த வாரம் இரண்டாவது வழக்கிலும் சி.பி.சி.ஐ.டி போலிஸார் சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். அதற்கான ஆணையை சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

இந்நிலையில் சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்குகள் உள்ள நிலையில் ஆதாரங்களைத் திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் சிவசங்கர் பாபாவிடம் தங்களை அழைத்துச் சென்றதாக மாணவிகள் சிலர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சிவசங்கர் பாபாவின் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தையாக இருந்த காயத்ரி, பிரவீனா உள்ளிட்ட ஐந்து ஆசிரியர்களுக்குச் சம்மன் கொடுப்பதற்காக கேளம்பாக்கத்துக்கு சிபிசிஐடி போலிஸார் சென்றனர். ஆனால் ஐந்து பேரும் வீட்டை பூட்டிவிட்டுத் தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. இவர்களை பிடிக்க போலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகாமல், பாலியல் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான வேலைகளில் சிவசங்கர் பாபா தரப்பினர் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. மேலும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி போலிஸார் முடிவு செய்துள்ளனர்.

Also Read: மொட்டையடித்து தப்ப முயற்சித்த சிவசங்கர் பாபா .. CBCID போலிஸ் அதிரடி ‘ஆக்ஷன்’ - சிக்கியது எப்படி?