Tamilnadu

“மக்கள் சேவைக்கு அடையாளமாக ஓய்வின்றி உழைக்கும் உதயநிதி ஸ்டாலின் MLA" - வி.பி.கலைராஜன் சிறப்பு கட்டுரை!

மனுநீதி சோழன் தமிழர்களால் மறக்கமுடியாத மன்னராவார். நீதி வழங்கியதில் உலகம் அறிந்த ஒப்பற்ற தமிழ்மன்னன். அதனால்தான் அந்த மன்னனின் சிலையை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி வழங்குவதில் நெறிபிறழாதவர் என்று வைத்துள்ளனர், வேறு எந்த மன்னனுக்கும் அப்பெருமை கிடைத்ததில்லை.

தன் கன்றுக் குட்டியைக் கொன்று விட்டதற்கு நீதி கேட்ட பசுவிற்கு அதற்கு காரணமான தனது ஓரே மகன் விடங்கனைப் படுக்கவைத்து தனது தேரை ஏற்றிக் கொன்று மனிதர்களுக்கு மட்டுமல்ல; ஐந்தறிவு பசுவிற்கும் தனது நீதி வழங்கும் தன்மையால் பெருமை சேர்த்தவர். இச்செயல் அவரது ஆளுமை ஆற்றல் தன்மைக்கு உதாரணமாக மிகைப்படுத்தி கூறப்பட்டதாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் வரலாற்றில் வைரவரிகளால் மனுநீதி சோழன் புகழ் பொறிக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக ஜொலிக்கும் சொற்கள்தான் அவை.

அந்த சோழ மன்னன் ஆண்ட மண்ணில் சோழர் தேசத்தில் தோன்றி இளமைப்பலி என்ற தனது மாணவர் பருவத்தில் எழுதிய எழுத்தால் அறிஞர் அண்ணாவை ஈர்த்து அவரின் ஆசான் தந்தை பெரியாராலும் பெருமைப்பட பேசப்பட்ட தமிழர்க்கு அருமைமிகு ஆட்சித்தந்து அவர் ஆண்ட காலம் மட்டுமல்ல; இன்னும் பல நூற்றாண்டுகளுக்கும் போற்றப்படும் கலைஞரின் மகன் தனது தந்தை வழியில் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற சொற்களுக்கு ஏற்ப நாடாளும் நம்மவர் நாடுபோற்றும் வல்லவர் முதல்வராம் மக்களால் வாஞ்சையோடு போற்றப்படும் மு.க.ஸ்டாலின் மூழ்கி எடுத்த முத்தாய், முத்தமிழனின் வித்தாய் திகழ்பவர்தான் கழக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்களின் அதிக வாக்குகளால் வாகைசூடிய வல்லவர்தான் சகோதரர் என் இதயமேற்ற இனிய உதயநிதி ஸ்டாலின். மக்கள் சேவையின் மாமனிதராய் நேசிக்கும் லட்சக்கணக்கான தனது தொகுதி மக்கள் சுகமாய் வாழ்ந்திட துடிப்புடன் சேவை செய்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இப்பொழுது புரிகிறதா ஆளுமையில் சிறந்தவராய் உழைத்த மனுநீதி மரபில் வந்த உதயநிதி என்ற தலைப்பை இக்கட்டுரைக்கு நான் வைத்த காரணம் சரிதான் என்பது! ஆம்! வெற்றி பெற்றவுடன் திரையுலகம் சென்று விடுவார் அல்லது தொகுதி மக்களைச் சந்திக்க எப்போதாவது வந்தாலும் வருவார், மக்கள் அவரைப் பார்ப்பதே மிக எளிதாக இருக்காது என்று தேர்தல் நேரத்தில் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு வாய் பூட்டு போட்டுவிட்டு தினம்தினம் தன்னை தேர்ந்தெடுத்த மக்களைச் சந்தித்து பின் சிந்தித்து தீர்க்கமான மிகத்தெளிவான தீர்வை தந்து வருகிறார் சகோதரர் உதயநிதி ஸ்டாலின்.

உலகில் வாழும் தமிழ்மக்களால் வாயார தந்தை என்று அழைக்கப்பட்டார் பெரியார். உடன் பிறந்த அண்ணனாய் தமிழர்களால் அண்ணனாக கருதப்பட்டு அண்ணா! அண்ணா! என்று அழைக்கப்பட்டவர்தான் பேரறிஞர் அண்ணா. செயலால், தொண்டால், தமிழ்ப்பற்றால் போற்றப்பட்டு தலைவர் தலைவர் என்று அழைக்கப்பட்டவர்தான் தலைவர் கலைஞர். உழைப்பு உழைப்பு என்றால் இவர்தான் என கலைஞரால் போற்றப்பட்டு அறிஞர் அண்ணாவால் நான் நினைத்ததை சாதிக்கும் தன்மைக்காக தனது தந்தை கருணாநிதியைப் போல் பிடிவாதகாரனாய் இருக்கிறாயே என்று அண்ணாவால் புகழப்பட்டு தளராத பணியால் தளபதி தளபதி என்று அழைக்கப்பட்டவர்தான் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின்.

அதைப்போல் என்னால் மட்டுமல்ல; கழகத்தினரால் அன்பொழுக துளியும் சுயநலமில்லா தூய்மையுடன் கலைஞரின் பேரன் என்று அழைக்கப்படும் தகுதியானவராய், தூய்மையானவராய் மக்களுக்கு தொண்டு செய்வதில் துவளாத நெஞ்சினராய் துடிப்பு மிக்க இளைஞராய் தொகுதியில் உள்ள மூத்தோரால் வயதில் மூத்த தாய்மார்களால் தம்பி! தம்பி! என்று பாசத்தோடு அழைக்கப்படுபவர்தான் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். திராவிட இயக்க வரலாற்றில் உதயசூரியனாய் சுகமளிக்கும் நான்காம் தலைமுறை நாயகன்தான் உதயநிதி ஸ்டாலின்.

என்னே உழைப்பு! தளபதியின் மகன் என்பதை கச்சிதமாய் காட்டுகிறாரே என்று எதிரிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு போற்றப்படுபவர்தான் சகோதரர் உதயநிதி ஸ்டாலின். இதுவரை எந்த சட்டமன்ற உறுப்பினரும் சென்று பார்த்திடாத மிக மிககுறுகிய வழிக்குள்ளும் புகுந்து சென்று பல ஆண்டுகளாய் புரையோடிப் போன புண்ணாய் திகழ்ந்துவந்த 65-வது வட்டம்கொய்யாத் தோப்பு பகுதியில் ஒரு ஆள் உயரத்திற்கு அதாவது 6 அடி உயரத்திற்கு பல்லாண்டுகளாய் கொட்டப்பட்ட கெட்டியான குப்பையை வெட்டி எடுத்து வெளியேற்றி மக்கள் மகிழ்வோடு வாழ்ந்திட வழிவகுத்தார்.

குத்ரத் அலி மக்கான் தெருவில் வசிக்கும் 1000 குடும்பங்கள் இந்த நவீனகாலத்திலும் சாக்கடை சென்றிட வழி அமைக்கப்பட்டதில்லை. அந்த பகுதிக்குள் செல்ல ஒரு ஆள் மட்டுமே செல்லும் மிகக்குறுகிய வழி ஒருவர் செல்லவேண்டுமென்றால் எதிரில் வருபவர் நின்றுதான் ஆகவேண்டும். அந்த சாலைக்குள் புகுந்து சென்று அம்மக்களைச் சந்தித்து அவர்கள் தார்சாலைதான் போட வேண்டுமென்ற கோரிக்கை வைத்தபோது சிமெண்ட் சாலை தான் போட முடியுமென்ற போதிலும் மக்கள் விரும்பிய தார்சாலை போட்டிட வேலை செய்ய உத்தரவிட்டு அப்பகுதி மக்களின் உள்ளம் குளிரச் செய்தவர் தான் சகோதரர் உதயநிதி ஸ்டாலின்.

திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் உள்ள மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மின்வசதி இதுநாள்வரை கிடைக்காமல் இருந்ததை அறிந்து அதிரடி நடவடிக்கையாக திடீரென்று யாரும் அழைக்காமலே சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்து நிலவரத்தை புரிந்து அப்பகுதியிலுள்ள 500 வீடுகளுக்கு மின்வசதி கிடைத்திட வழிவகுத்தார்.

சிந்தாதிரிப்பேட்டையில் மக்கள் பல்லாண்டுகள் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதனை பொருட்படுத்தாமல் மதுபானக்கடை (டாஸ்மாக் கடை) கொடுப்பவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து தொடர்ந்து மக்களுக்கு சிரமம் கொடுத்து நடத்தி கொள்ளை லாபம் அடைந்து வந்தனர். இரவும் பகலும் இடைவிடாமல் நடந்துவந்த மக்களுக்கு தொல்லை தந்த மதுபானகடைக்கு நேரில் சென்று பார்த்து ஒரேநாளில் நடவடிக்கை எடுத்து மூடிடச் செய்து மக்களின் முகத்தில் புன்னகை மலரச்செய்தவர்தான் முத்தமிழ் வித்தகர் கலைஞரின் பேரன் சகோதரர் உதயநிதி ஸ்டாலின். தம்பியின் செயலால் சந்தோஷத்தில்திளைக்கிறது சிந்தாதிரிப் பேட்டை.

சாக்ஸ் காலனி, நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதிகளில் இருக்கும் குடிசை மாற்று குடியிருப்புவாசிகளின் குறைகளைக் கேட்டு அறிந்து அவர்களின் குறைகள் எதுவாகினும் தனக்கு உடனே தெரிவிக்க வேண்டுமென குடியிருப்போர் நலச் சங்கத்தை உருவாக்கி குறைகளை களைந்து குதூகலம் வரச் செய்தவர்தான் சகோதரர் உதயநிதி ஸ்டாலின்.

ஒருகாலத்தில் திருநங்கைகள் வாழ்வதற்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. அதனை களைந்து மூன்றாம் பாலினத்தினரான அந்த மக்களுக்கு திருநங்கைகள் என்று பெயர் சூட்டி மகிழ்வித்தவர்தான் கலைஞர். தனது தொகுதியில் உள்ள 95 திருநங்கைகளுக்கு சமூகநலத்துறையில் அடையாள அட்டையையும் வழங்கி ரேஷன் கார்டும் தர செய்து அவர்கள் வயிற்றில் பால்வார்த்தவர் தான் தளபதி அண்ணன் ஸ்டாலின் வாரிசு சகோதரர் உதயநிதி ஸ்டாலின்.

தன் தொகுதி மக்களுக்கு 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகளைப் போட வைத்ததோடு, படிக்கும் மாணவ செல்வங்கள் இதுவரை 75 பேருக்கு கல்வி உதவித் தொகை, மடிக்கணினி, மிதிவண்டிகளை வழங்கி மாணவ கண்மணிகளை ஊக்கப்படுத்தியதோடு கொரோனா காலத்தில் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்த மக்களுக்கு உதவியவர்தான் சகோதரர் உதயநிதி ஸ்டாலின்.

இது எப்படி இவரால் மட்டும் சாதிக்கமுடிகிறது என்று எண்ணுபவர்கள் முதலமைச்சரின் மகன் என்பதால் முடிகிறது என்று முணுமுணுப்பு செய்பவர்களும் உண்டு. அவர்களுக்காக தெளிவூட்ட எழுதுவதெல்லாம் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களிடம் எனக்கு ஏதாவது செய்யவேண்டுமென்றால் தடுப்பூசி, மாணவர்க்கு உதவித்தொகை, கைக்கிள், லேப்டாப் வழங்குங்கள் இப்படி தன் தொகுதி மக்கள் பயனுற உதவிடகேட்பதால் கிடைத்தவைகளை தான் தனது தொகுதி மக்களுக்கு ஆக்கபூர்வமான முறையில் உதவியாக செய்கிறார்.

வள்ளல் தன்மையின் அடையாளமாக பாரி வள்ளல், சிந்தனையின் அடையாளமாக சாக்ரடீஸ், முத்தமிழின் அடையாளமாக கலைஞர், உழைப்பின் அடையாளமாக அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின், புரட்சியின் அடையாளமாக சேகுவேரா, வீரத்தின் அடையாளமாக விஜயாலய சோழன், வெற்றியின் அடையாளமாக ராஜ ராஜ சோழன், மக்கள் சேவைக்கு அடையாளமாக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் என்று கூறுவதற்கேற்ப மக்களுக்காக நாளும்பொழுதும் ஓய்வில்லாமல் உழைக்கிறார்.

சுவிட்சர்லாந்து பத்திரிக்கையான போல்கெட்ஸ் டக்பிளாடு பொலிடி கென் இதழுக்கு மாவீரர் சோவியத்தின் கலைஞர் லெனின் பேட்டியளித்தபோது “தூங்குவதற்கு கூட நேரமில்லாது கடும் பணி இருந்து வந்தபோதிலும் தான் நன்றாக இருப்பதாக” கூறினார். “எனக்கு ஒரே ஓர் ஆசை கனவுதான் உண்டு அதாவது கொஞ்சம் ஓய்வுபெற வேண்டும் ஓர் அரைமணி நேரமாவது” என்றார் லெனின். இப்படி தூங்குவதற்கு நேரமில்லாமல் துடிப்போடு எதிரிகளை கூட ஈர்க்கும் வண்ணம் தடிப்பில்லா வார்த்தைகளோடு அன்போடு அழைத்து தம்மை வெற்றி பெற வைத்த மக்களுக்காக சுற்றிச் சுழன்று பணிபுரிகிறார் சகோதரர் உதயநிதி ஸ்டாலின். கழக இளைஞர் அணிச் செயலாளர் என்பதால் இடைஇடையே கழகப் பணிக்காக வெளியூர் பயணம்.

இத்தகைய பெருமைமிகு சகோதரரை இக்கட்டுரையின் இறுதியில் அன்புடன் தம்பி என்றழைப்பதை உரிமையாக கருதி இதயத்தில் வாழும் தம்பி உதயநிதி ஸ்டாலின் உழைப்பு ஓங்கட்டும்! மாசில்லா அவரது மக்கள் பணி தொடரட்டும்!

- வி.பி.கலைராஜன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

(முரசொலி 14-07-2021)

Also Read: “மேகதாது அணையால் ஆபத்துதான்.. அதை எந்த வகையிலும் தடுத்தாக வேண்டும்” : முரசொலி தலையங்கம்!