Tamilnadu

“தேர்தலை ஜனநாயக முறையில் சந்திக்கும் எண்ணமே பா.ஜ.கவுக்கு கிடையாது” : ‘தினகரன்’ தலையங்கத்தில் விமர்சனம்!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தேர்தலின்போது நடந்தேறும் வன்முறைகள் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கண்கூடாகவே தெரிகிறது என தினகரன் தலையங்கம் தீட்டியுள்ளது.

‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் பின்வருமாறு:-

தேர்தலை ஜனநாயக முறையில் சந்திக்கும் எண்ணமே பா.ஜ.க கட்சிக்கு கிடையாது என்று தோன்றுகிறது. மக்களவை தேர்தலாக இருந்தாலும், பேரவை தேர்தலாக இருந்தாலும், பஞ்சாயத்து தேர்தலாக இருந்தாலும் தங்கள் கட்சி எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற இலக்கில் அக்கட்சி தொண்டர்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். தேர்தல் ஆணையம் ஆளும் பா.ஜ.க அரசுக்கு அடிபணிந்து தனது சுயத்தை இழந்து வன்முறைகளையும், விதிமீறல்களையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இது சரியான ஜனநாயக நடைமுறையல்ல.

உத்தரப்பிரதேசத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை முக்கியத்துவம் வாய்ந்ததாக பா.ஜ.க கருதுகிறது. இந்த தேர்தலின் வெற்றி அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. பஞ்சாயத்து தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது லக்னோ மாவட்டம் லக்கிம்பூர் கெரியில் பா.ஜ.கவினர் சிலர் சமாஜ்வாதி கட்சிபெண் தொண்டரின் சேலையை இழுத்து மானபங்கப்படுத்தும் வீடியோ வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 14க்கும் மேற்பட்ட இடங்களின் துப்பாக்கிச் சூடு, கல் எறிதல் போன்ற வன்முறைகளும் அரங்கேறியுள்ளது. யோகி ஆதித்யநாத்தின் பதவி ஆசை கொண்ட குண்டர்கள் இந்த அசிங்கத்தை அரகேற்றியுள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வன்முறை வீடியோவை பிரதமருக்கு டேக் செய்துள்ள பிரியங்கா காந்தி, வெடிகுண்டுகள், தோட்டாக்கள், கற்கள் பயன்படுத்திய உத்தரப்பிரதேச பா.ஜ.க தொண்டர்களுக்கு வாழ்த்துகள். பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதுமட்டுமின்றி, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ஜனநாயகம் சீர்குலைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களை பிடித்து முன்னணி வகிக்கிறது. சமாஜ்வாதி கட்சி குறைந்த இடங்களையே கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் போட்டியிடாமல் விலகிக்கொண்டது.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் போது திரிணாமுல்காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க பா.ஜ.கவினர் கொடுத்த தொல்லைகள், மேற்கொண்ட தந்திரங்கள் அனைத்தும் மக்கள் நன்கறிவர். தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஜனநாயக படுகொலை புரிந்து அவர்கள் வெற்றி பெற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளபோது செயல்படுத்தும் திட்டங்கள், மக்கள் நல வளர்ச்சி பணிகள் ஆகியவற்றை பொறுத்தே வாக்காளர்கள் தகுந்தவர்களுக்கு வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். ஆனால், பதவி, அதிகாரம் தங்களுக்கே நிரந்தரமானது என்ற கோணல் புத்தி கொண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக எல்லாவித கீழ்த்தரமான வேலைகளையும் செய்ய தயங்குவது கிடையாது.

குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தேர்தலின்போது நடந்தேறும் வன்முறைகள் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கண்கூடாகவே தெரிகிறது. பெரும்பான்மை பலம் பெற்ற ஒன்றிய அரசு என்ற ஆணவத்தில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வோம் என்பது அதிகார வேட்கையின் உச்சம். இதற்கு மக்கள் உரிய பதில் தரும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Also Read: "செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்திமையத்தை மாநில அரசிடம் ஒப்படைக்கவேண்டும்”: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்!