கோப்புப்படம்
Tamilnadu

கீழ்ப்பாக்கம் பள்ளி மராமத்து பணிகள் தொடக்கம்; கட்டணம் குறைத்து, நவீனமயமாக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

சென்னை கீழ்ப்பாக்கத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான பள்ளி கட்டடங்களுடன் கூடிய நிலம் தனியார் நிர்வாகத்திடம் கடந்த மாதம் சுவாதீனம் பெறப்பட்டது. இந்த இடத்தில் இயங்கி வந்த பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்த முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இப்பள்ளிக்கு காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என பெயர் சூட்டப்பட்டு பள்ளியின் உட்டகட்டமைப்பு வசதிகளை மேம்படுவத்துவதற்கான மராமத்து பணிகள் இன்று தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை சேகர்பாபு பள்ளியில் மராமத்து பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு இந்த பள்ளியில் ஆசிரியர் உட்பட 57 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். 1300 பேர் கொண்ட பள்ளியில் 750 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை சுவாதீனம் செய்து கொண்ட பிறகு மாணவர்கள் நலன் கருதி முதலமைச்சர் உத்தரவின் பேரில் ரூ 37 லட்சம் செலவில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மராமத்து பணிகளை மேற்கொள்ள இன்று பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பள்ளியில் எல்கேஜி பயிலும் குழந்தைகளுக்கான சேர்க்கை கட்டணம் ரூ.12.500லிருந்து 5 ஆயிரம் ரூபாயாக குறைத்துள்ளோம். 12ம் வகுப்பு கட்டணம் 20 ஆயிரத்திலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாக குறைத்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார். பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள், பைகள் என இலவசமாக வழங்கப்பட்டு பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் நவீனமயக்கப்படும்.

இதேபோல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்பட்டு வரும் 6 கல்லூரிகள் மற்றும் 47 பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த மராமத்து பணிகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Also Read: “10 ஆண்டுகளாக கவனிக்கப்படாத தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்” : பொன்குமார் உறுதி!