Tamilnadu
109D உருவானது புதிய வழித்தடம் - 100 மீனவ கிராம மக்கள் பயன்பெற புதிய பேருந்து இயக்கம்!
சென்னை திருவொற்றியூர் முதல் கோவளம் வரை செல்லக்கூடிய மாநகர பேருந்தை அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் இன்று புதிய வழித்தடத்தை வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி கொடியசைத்து மாநகர பேருந்து சேவை தொடங்கி வைத்தார்.
வடசென்னை பகுதிக்குட்பட்ட திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினமும் சாந்தோம், அடையார், திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு வேலைக்காக அரசு பேருந்து, மின்சார ரயில் என பயணித்து கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு செல்பவர்கள் பாரிமுனை சென்று அங்கிருந்து பேருந்து மூலமாகவோ, ரயில் மூலமாகவோ செல்கின்றனர். மேலும் கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ கிராமத்தினரும் போக்குவரத்திற்கு இரண்டு மூன்று வாகனங்கள் மாறி சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வடசென்னை பகுதியில் பணிக்காக அடையார், திருவான்மியூர் செல்பவர்களும், திருவொற்றியூர் முதல் கோவளம் வரை உள்ள 100 மீனவ கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும் திருவொற்றியூர் முதல் கோவளம் வரையிலான புதிய வழித்தடத்தில் வழித்தட எண் 109டி என்ற எண்ணில் அரசு பேருந்து இயக்கப்பட்டது.
திருவொற்றியூரில் இருந்து புறப்படும் பேருந்து சுங்கசாவடி, ராயபுரம், பாரிமுனை, தலைமைசெயலகம், கண்ணகி சிலை, நொச்சிகுப்பம், பட்டினபாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர், விஜிபி ஆகிய பகுதிகள் வழியாக கோவளத்தை சென்றடையும். இந்த வழித்தடத்தில் இரு வழிகளிலும் 2 பேருந்துகள் தினமும் 4 முறை இயக்கப்படும்.
சாதாரணமாக திருவொற்றியூரில் இருந்து கோவளம் செல்ல வேண்டுமானால் திருவொற்றியூரில் இருந்து பாரிமுனைக்கு ரூ.23 மற்றும் பாரிமுனையில் இருந்து கோவளத்திற்கு ரூ.37 என மொத்தம் ரூ.60 வரை பேருந்திற்கு செலவாகும். ஆனால் இப்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் ரூ.47 கட்டணத்தில் திருவொற்றியூரிலிருந்து கோவளம் சென்றுவிடலாம்.
இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி திருவொற்றியூர் புதிய பேருந்து பணிமனையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.சங்கர், ராயபுரம் ஐட்ரிம்ஸ் மூர்த்தி, ஜே.ஜே எபினேசர், ஆகியோர் கலந்து கொண்டு இந்த புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி கலாநிதி வீராசாமி, “குறைந்த கட்டணத்தில் வட சென்னை மக்கள் ஒரே வழித்தடத்தில் பேருந்தில் பயணிக்கும் அளவிற்கு மாநகர பேருந்து தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வடசென்னையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதற்காக இடம் ஆய்வு செய்து செய்யப்பட்டு வருகிறது. வெகு விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்” என தெரிவித்தார்
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!