Tamilnadu
“தமிழ்நாட்டில் சுகாதார தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்த நடவடிக்கை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
தமிழ்நாட்டில் தரமான மருத்துவமனைகள், திறமைமிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த மாணாக்கர்களை உருவாக்குவதில் சர்வதேச தரத்தை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டம் குறித்து தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பொதுமக்களின் நலனுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்கள், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள், புதிய மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய நிலை, பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆற்றிவரும் பணிகள் குறித்தும்,
அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும், JICA, உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கும் நிதி உதவியில் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்தும், இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்திடவும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவமனை செயல்பாடுகள், எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்துவது, அரசு மருத்துவ நிலையங்களில் உள்ள பணியாளர் காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புதல், உணவுப் பாதுகாப்பு, மருத்துவமனை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை திறம்பட மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு இணைய வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும், தமிழ்நாட்டில் சுகாதார தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.
தமிழ்நாட்டில் தரமான மருத்துவமனைகள், திறமைமிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த மாணாக்கர்களை உருவாக்குவதில் சர்வதேச தரத்தை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!