Tamilnadu

"பள்ளிக்கல்வித் துறையின் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படுக" : முதலமைச்சர் அறிவுறுத்தல்!

பள்ளிக் கல்வித் துறையின் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியை ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காகப் பள்ளிக் கல்வித்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ஆற்றிவரும் கல்விப் பணிகள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிவறை, மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், பள்ளி வளாகப் பராமரிப்பு, பாதுகாப்புப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ளவும், இணைய வசதிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துவது குறித்தும், மாணவர்களின் கற்றல் அடைவில் கவனம் செலுத்தித் தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

தரமான அடிப்படைக் கல்வி முதல், அரசுப் பள்ளி மாணவர்களை இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்வது வரை, பள்ளிக் கல்வித் துறையின் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியை ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “அ.தி.மு.க ஆட்சியில் ஆவினில் நடைபெற்ற முறைகேடான பணி நியமனங்கள் குறித்து விசாரணை” : அமைச்சர் நாசர் உறுதி!