Tamilnadu
கலைஞர் தொடங்கிவைத்த ஹூண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது தயாரிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
1998ல் ஸ்ரீபெரும்புதூரில் ஹூண்டாய் நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார் அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோடியாவது வாகனத்தை இயக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வுகள் அளிக்கும் நிறுவனம் மற்றும் பெரும் ஏற்றுமதி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளில் ஒரு கோடி கார்கள் உற்பத்தி செய்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் தொழிற்சாலையில் இருந்து ஒரு கோடியாவது வாகனமாக உற்பத்தி செய்யப்பட்ட அல்கஸார் மாடல் கார் வெளிவருகிறது. இந்தப் பெருமைமிகு தருணத்தின் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரின் முன்பகுதியில் தனது கையொப்பமிட்டு காரை இயக்கி வைத்தார்.
அதன்பின்பு நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றினார்.
அதேபோல் நான் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை தொழில்வளர்ச்சியில் முதல் மாநிலமாக மாற்றுவேன். இதற்கு ஹூண்டாய் நிறுவனம் போலவே அனைத்து நிறுவனங்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இந்நிறுவனம் தமிழகத்தில் அதிக முதலீடு செய்த நிறுவனம் மட்டுமல்ல. கூகுள் வரைபடத்தில் ஸ்ரீபெரும்புதூரை அடையாளம் காட்டிய நிறுவனம்.” எனப் பேசினார்.
பின்பு, நவீன தொழில்நுட்பத்தில் உயர்தரத்துடன் உருவாக்கப்பட்ட பேட்டரி காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். நிகழ்ச்சியின் முடிவில் ஹூண்டாய் தொழிற்சாலை வளாகத்தில் வசந்தராணி என்னும் மரக்கன்று ஒன்றை முதலமைச்சர் நட்டுவைத்தார்.
Also Read
-
“உங்கள் நிறுவனங்களை தமிழ்நாட்டில் Invest செய்ய Motivate செய்யுங்கள்!” - முதலமைச்சர் கோரிக்கை!
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !