Tamilnadu
“பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தொடர்பாக ஆலோசனை- விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்”: அமைச்சர் மூர்த்தி தகவல்
சென்னை தியாகராய நகரில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துறையாடலில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள், வணிகர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா, வணிக வரித்துறை ஆணையர் சித்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக ஆன்லைன் பதிவு நடைபெற்று வருவதாகவும், தொடர்ந்து மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமிக்கும் பணி விரைவில் நடைபெறும் என்றும் கூறினார்.
மேலும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தொடர்பாக ஜி.எஸ்.டி கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் மேல்மட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் விலை குறைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஜி.எஸ்.டி-க்கு முன்பு வாட் வரி அமலில் இருந்த காலத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்றளவும் நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, போலி பில் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், பொருட்களை விற்பனை செய்யாமல் பில் மட்டும் போட்டு வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் பேசிய வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, “11 ஆண்டுகளுக்குப் பிறகு வணிகர்களை அழைத்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜி.எஸ்.டி வரி குறித்து எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி உள்ளோம்.
துணிக்கடை, நகைக்கடைகளை திறப்பது தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க உள்ளோம். விரைவில் அனைத்து கடைகளும் திறக்கலாம் என்கிற செய்தி வரும் என்று நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“வீடியோலாம் எடுக்க கூடாது...” - தேர்தல் அலுவலரை தடுத்த தஞ்சை பாஜக நிர்வாகி... அதிரடி காட்டிய போலீஸ்!
-
“நாங்கள் கொள்கையில் நீடித்து வருகிறோம்...” - CPIM மாநில செயலாளர் சண்முகம் அதிரடி!
-
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இது நடக்கும் : பா.ஜ.க அரசின் திட்டம் - ராகுல் காந்தி எச்சரிக்கை!
-
பா.ஜ.க ஆளும் அரியானாவில் 3 வயது சிறுமி வன்கொடுமை : உச்சநீதிமன்றம் தலையிட்ட பின் குற்றவாளிகள் கைது!
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!