Tamilnadu

“மக்கள் பிரச்சனைகளை களைவதில் முதலமைச்சர் காட்டும் முனைப்பின் வெளிப்பாடே இந்த செயல்பாடு” - MLA பாராட்டு!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி போலிஸார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கரை கைது செய்து செங்கல்பட்டு மகிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சிவசங்கர் பாபா மீது பாலியல் சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் ஏராளமான மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை இவ்விவகாரத்தில் முனைப்பாகச் செயல்பட்டு, அப்பள்ளியில் படித்துவந்த பெரும்பான்மையான மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வி.சி.க-வின் சட்டமன்ற கட்சி கொறடாவுமான எஸ்.எஸ்.பாலாஜி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ, “திருப்போரூர் சட்டமன்ற தொகுதி - கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்கூட மாணவர்கள் நிலை குறித்து எனது கவலையை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சகோதரர் அன்பில் மகேஸ் அவர்களிடம் வெளிப்படுத்தினேன்.

அமைச்சர் அவர்கள் கல்வித்துறை அலுவலர்கள் இது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக சொன்னார். அதன்பின் சில நிமிடங்களில் மீண்டும் அலைபேசி இணைப்பில் வந்து, அந்தப் பள்ளியில் படித்து வந்த 1,200 மாணவர்களில் 800 பேர் விரும்பிய வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டதாகவும், மீதமுள்ள மாணவர்களும் இன்னும் ஒரிரு நாட்களில் வேறு பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

மக்களின் பிரச்சனைகளை களைவதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காட்டும் முனைப்பின் வெளிப்பாடுதான் அவர்வழியில் சிறப்பாக மக்கள் பணியாற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சகோதரர் அன்பில் மகேஸ் அவர்களின் இந்த செயல்பாடு. அவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம் என முரசறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - கி.வீரமணி பாராட்டு!