Tamilnadu
“இனி எப்போதும் நீங்கள் ‘ஒன்றியம்’ தான்” : தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘ஒன்றிய அரசு' என்று அழைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் அளித்த விளக்கம் பின்வருமாறு:-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 'ஒன்றிய அரசு' என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, "இந்தியா, அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்" என்றுதான் “India, that is Bharat, shall be a Union of States" இருக்கிறது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை.
'ஒன்றியம்' என்பது தவறான சொல் அல்ல; ‘மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது' என்பதுதான் அதனுடைய பொருள். இன்னும் சிலர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லாததை, எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டு, அதை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 1957 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே 'இந்திய யூனியன்' என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. 1963 ஜனவரி 25, நாடாளுமன்ற மாநிலங்களவையில், பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசுகிறபோது, குறிப்பிட்டார்கள் - "அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது, பொது மக்களிடம் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்கும் இடையே - அதாவது மாநிலங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது" என்றுதான் பேசியிருக்கிறார்.
'சமஷ்டி' என்ற வார்த்தையை மரியாதைக்குரிய ம.பொ.சி. அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். 'வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு - வருக உண்மையான கூட்டாட்சி' என்று மூதறிஞர் ராஜாஜி அவர்களே எழுதியிருக்கிறார்கள்.
எனவே, ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம் - பயன்படுத்துவோம் - பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!