Tamilnadu

16 சிலைகள் கண்டுபிடிப்பு.. கண்மூடி இருந்த அதிமுக அரசு.. தி.மு.க ஆட்சியில் அதிரடி காட்டும் அறநிலையத்துறை!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் 16 உற்சவர் சிலைகள் அறநிலைத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600 ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இப்படி நீண்ட வரலாறு கொண்ட ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட வெள்ளிப் பல்லக்கில் வெள்ளி காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இரட்டை திருமாளிகை, திருவாச்சி மாயம் போன்ற புகார்களால் சிலை கடத்தல் பிரிவு போலிஸார் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்து பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள பொக்கிஷ அறையில் ஆவணங்களில் வராத பல சிலைகள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோவில் பொக்கிஷ அறையில் புதியதாக 16 உற்சவர் சிலைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் நடத்திய ஆய்வில் விநாயகர், லட்சுமி, 9 நாயன்மார்கள் உள்ளிட்ட 16 சிலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. கோவில் வளாகத்திற்குள் இருக்கும் பொக்கிஷ அறையில் கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் மற்றும் உற்சவர் சிலைகளுக்கு பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் பூஜைக்கு பயன்படுத்தும் பஞ்சபாத்திரம் போன்ற பொருட்கள் ஆகியவை மட்டுமே வைக்கப்பட்டிருக்கும்.

கோவில் பொக்கிஷ அறையில் எவ்வளவு காலமாக இந்த உற்சவர் சிலைகள் இருக்கின்றன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வளவு காலமாக ஏன் அந்த உற்சவர் சிலைகள் பயன்படுத்தப்படாமல் பொக்கிஷ அறைகளில் பூட்டி வைக்கப்பட்டு இருக்கிறது என கேள்வி எழுந்துள்ளது.

இந்த சிலைகள் குறித்த தகவல்கள் கோவில் ஆவணங்களில் இதுவரை குறிப்பிடப்படாமல் உள்ளன. மேலும் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களில் வராத 16 சிலைகள் என்ன மாதிரியான உலோகத்தால் செய்யப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் தியாகராஜனிடம் கேட்டபோது, கண்டெடுக்கப்பட்ட சிலைகள் குறித்த ஆய்வினை மேற்கொண்ட பிறகுதான் சிலைகள் எந்த உலோகத்தால் செய்யப்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்படும். தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆய்வு செய்வது சற்று காலதாமதமாகி வருவதாகத் தெரிவித்தார்.

ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை கடத்தல் பிரிவு போலிஸார் அடிக்கடி விசாரணை செய்து பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டு வரும் நிலையில் தற்போது ஆவணங்களில் வராத 16 உற்சவர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “நீங்கள் எதற்கு; நானே வருகிறேன்” : தொழிலாளர் கோரிக்கையை சங்க அலுவலகத்திற்கே வந்து பெற்றுக்கொண்ட அமைச்சர்!