Tamilnadu
“நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்” : உயர்நிலைக்குழு அறிவிப்பு!
நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழு, நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றைச் சரிசெய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்துள்ளது.
அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்றை அமைப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில்
2. ஜி.ஆர்.ரவீந்திரநாத், உறுப்பினர்
3. ஜவஹர் நேசன், உறுப்பினர்
4. அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உறுப்பினர்
5. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை உறுப்பினர்
6. அரசு செயலாளர், சட்டத்துறை உறுப்பினர்
7. அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உறுப்பினர்
8. இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் உறுப்பினர்
9. கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் / செயலர், தேர்வுக் குழு உறுப்பினர்-செயலர் / ஒருங்கிணைப்பாளர்
ஆகியோர் அடங்கிய இந்தக் குழு உரிய புள்ளிவிவரங்களை ஆய்வுசெய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும். இந்தப் பரிந்துரைகளை ஆய்வுசெய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் இக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் உயர்நிலைக் குழு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் வரும் 23ஆம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ, neetimpact2021@gmail.com என்ற இ-மெயில் வழியாகவோ தங்களது கருத்துகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரம் நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளையும் ஆராயும் இக்குழு ஒரு மாதத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“எடப்பாடி பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலை!” : வீரபாண்டியன் கண்டனம்!
-
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!
-
திருமணம் ஆகாத இளைஞர்களே குறி... 19 வயதில் 8 ஆண்களை ஏமாற்றிய ஆந்திராவின் கல்யாண ரா(வா)ணி!